Tuesday, August 10, 2010

கருக்கிய நாளிலேயே கருக்கொள்கிறோம்!

தனது இரத்த உறவுகளைவிட இன விடுதலையே முதன்மைப்பணி என உறுதிகொண்டு, இன விடுதலைக்காகக் களம் கண்டு, வரலாறாய் - மண்ணில் விதைகளாய் - அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டிகளாய்ப் போய்விட்ட போராளிகளின் அகக்கடமைகளைத் தம் தோளில் ஏற்று அன்னையாய், தந்தையாய், அண்ணனாய், தோழனாய் கடமையாற்றிட நம் தோழன் கண்ட கனவுதான் செஞ்சோலை.

ஈழம் ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையில் பலபாடங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. நாட்டு விடுதலைப் பணியையும், நாட்டுப் பணிக்காக போராடிய போராளிகளின் வீட்டுப்பணியையும் ஒருசேரத் தூக்கிச் சுமந்த அக்கறை கொண்ட தலைமை - சக தோழர்களின் சுயமரியாதையையும் அவர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் ஆயிரந்தடவை யோசித்து யோசித்து திட்டமிட்டுப் பணியாற்றும் தாய்மை இவற்றைத்தான் மாவீரர்கள் துயிலும் இல்லங்களாகவும் செஞ்சோலைகளாகவும் கண்டோம்.

தமிழ்நாட்டில், விடுதலைப்போராட்டத்தின் கருவிகள் வேறு. போராட்டத்தின் தன்மையும் வேறானது. நேரடியாகக் கொல்லும் எதிரி நம்மிடம் இல்லை. மூளைக்கு இடப்பட்ட விலங்குகளை உடைத்தெறியவேண்டிய கருவிகள்தான் இங்கு தேவை. இங்கே அடிப்படையாக பண்பாட்டுப்புரட்சி நடக்க வேண்டியுள்ளது.

கருவிகளும் களங்களும் மாறியிருக்கலாம் ஆனால் களப்பணியாற்றும் தோழர்களின் உணர்வுகள் ஒன்றுதான். அப்படி தமிழ்நாட்டில் போராட்டக்களத்தில் உரிய பணியாற்றிவிட்டு இன்று தன்னந்தனியே கவனிப்பாரற்றுப் போய்விட்ட எம் முன்னோடிகளைப் பாதுகாக்கவேண்டும். விதைநெல்லாய் இச்சமுதாய விடுதலைக்கு அவர்கள் பயன்படுத்தப்படவேண்டும். பெரியார் காலத்தில் முகிழ்த்திருந்த சுயமரியாதைப் பயிர் செவ்வாழையாய் ஓங்கிவளர்ந்து இச்சமுதாயத்திற்குப் பயன்பட ஒரு முட்டுக்கொடுக்கும் அளவிலாவது ஒரு பணியைச் செய்ய வேண்டும் என்ற பல தோழர்களின் எண்ணஒட்டங்களில் உருவானது தான் கருந்திணை.

ஆகஸ்ட் 14 . செஞ்சோலை கருகிய நாளில் கருந்திணைச்செயலகம் தொடக்கம். மிக மிக எளிமையாக ஆனால் மிகவும் அழுத்தமாகத் தொடங்குகிறோம். ஒரு ஐம்பது பேரைத் தான் அழைத்திருக்கிறோம். அதுவும் குறுஞ்செய்தி வழியாக. தொடங்கி வைப்பவர் தோழர் ஆசிட் தியாகராசன். பிப்ரவரி 14 அன்று திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஒரு கருந்திணைக் கலந்துரையாடலை நடத்தினோம். அதில் மிகப் பெரிய அளவிலான கருந்திணை விடுதி தொடங்கப்படுவதற்கு முன்னால் - அந்தப் பணி திட்டமிட்டு செயல்வடிவம் பெறும் வரை தற்காலிகமாக மிக முக்கியமாக ஆதரவு தேவைப்படும் தோழர்களுக்காவது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் அதற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்றும் பேசி முடித்தோம். அதன்படி இந்த ஆறுமாத காலத்திற்குள் திண்டுக்கல் நகருக்கு அருகே நத்தம் சாலையில் முத்தமிழ்நகரில் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் ஒரு தங்குமிடத்தை உருவாக்கியுள்ளோம். இடம் தயாராகிவிட்டது. அதை நடத்தவேண்டியது எப்படி? என்பதை கலந்துபேச அடுத்தகட்ட கலந்துரையாடல் கூட்டம் 14.08.10 மாலை 5 முதல் 15.08.10 பகல் 1 வரை நடைபெற உள்ளது. வர இயலாதவர்கள் அஞ்சலிலோ, மின்னஞ்சலிலோ கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள். நன்றி.

கருந்திணை
1/810 முத்தமிழ் நகர், அடியனூத்து-அஞ்சல், திண்டுக்கல் - 624 003
- karunthinai@gmail.com

No comments:

Post a Comment