Wednesday, April 22, 2009

ம.க.இ.க ஒரு வெளிப்படையான பார்ப்பனக் கட்சியே!

முரண்பாடுகளின் மூட்டை என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 2009 புதிய ஜனநாயகம் இதழில் அதன் ஆசிரியர்குழு ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. கடந்த 5, 6 ஆண்டுகளாகவே மகஇக வினர் பெரியார் திராவிடர் கழகத்தையும் அதன் தலைமைப் பொறுப்பாளர்களையும் அரசல் புரசலாக ஆங்காங்கே தோழர்கள் மத்தியில் விமர்சித்து வந்தனர். வெளிப்படையாக அவர்கள் எதையும் விமர்சிக்காத தால் அவை அந்த அமைப்பின் தலைமைக்குத் தெரியாமல் ஆர்வக்கோளாறில் சில தோழர்கள் வைக்கும் விமர்சனம், அதைப் பெரிதாக நினைக்க வேண்டியதில்லை என ஒதுங்கி ஒதுங்கிச் சென்றோம். ஆனால் கடந்த சில மாதங்களாக குறிப்பாக தோழர் மதிமாறன் அவர்களின் ஒரு கட்டுரையைத் தொடர்ந்து சம்மந்தமில்லாமல் இணையதளங்களில் பல்வேறு புனைப்பெயர்களில். வலைப்பதிவுகளில் மகஇக வினர் வெளிப்படையாக பெரியார் தி.க வை மிகக்கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். முதலில் பெரியார் தி.க என்ற அமைப்பையும் அதன் தலைவர் களையும் விமர்சிக்கத் தொடங்கி பிறகு அது பெரியாரியலையும் கைவைக்கத் தொடங்கியது. தி.க வை குடும்ப அரசியல் செரித்துவிட்டது. எதிரி எவனும் அதை அழிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு அது சென்றுவிட்டது. எனவே பெரியாரியலை அடுத்த தலைமுறைக்குச் சரியாகக் கொண்டு செல்லப்போகும் அமைப்பு பெ.தி.க தான். அந்த அமைப்பை மோதிப்பார்க்கும் பணியைத் தொடங்க வேண்டும் என சில ஆண்டுகளாகத் திட்டமிட்டு காத்திருந்த தோழர்களுக்கு விடுதலை இராசேந்திரனின் வி.பி. சிங் பற்றிய மறுப்புக் கட்டுரை வாய்ப்பாகக் கிடைத்துவிட்டது. மதிமாறன் கட்டுரைகளில் பின்னூட்டங்களில் வம்பிழுத்துக் கொண்டிருந்தார்கள். மதிமாறன் அவர்களும் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக் கொண்டே வந்தார். நாம் ஒதுங்கி ஒதுங்கியே சென்றோம். இப்போது வெளிப்படையாக புதிய ஜனநாயகம் இதழில் அதன் ஆசிரியர் குழுவே களத்தில் இறங்கிவிட்டது அதற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் எந்தப் பெரியார் அமைப்பிலும் இல்லாதவர்கள், எல்லாப் பெரியார் தொண்டர்களுக்கும் பொதுவானவர்கள். ஒரு கட்சியை விமர்சிப்பது என்ற தளத்தைத் தாண்டி பெரியார் தத்துவத்தையே குறி வைத்து தாக்குவது என்ற தளத்திற்கு வந்துள்ள மகஇக பார்ப்பனத் தலைமைக்கு மிக மிக விரிவாக இப்பதிவில் பதிலைத் தர உள்ளோம். மகஇக என்பது ஒரு வெளிப்படையான பார்ப்பனக் கட்சியே என அம்பலப்படுத்தும் தொடர்கட்டுரையே இது.

ஏப்ரல் 2009 புதிய ஜனநாயகம் கட்டுரையில்...

“வி.பி.சிங் பற்றிய பல்வேறு கேள்விகள் எழுவதால் பெ.தி.க. தொண்டர்களைத் திருப்திப்படுத்திடப் பல்வேறு முரண்களோடும் திரிபுகளோடும் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.’’

நமக்குத் தெரிந்து, பெ.தி.க வில் உள்ள எந்தத் தோழனும் ஏதோ பெயருக்கு ஒரு கட்சியில் சேர்ந்து தாம் தான் உலகில் மிகப்பெரும் அறிவாளி என்ற போதையை ஏற்றிக்கொண்டு நடைமுறையில் கொள்கையின் வாடை கொஞ்சமும் இல்லாமல் வாழ்பவர்கள் அல்ல. தனது பார்ப்பனத் தலைமையை யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ம.க.இ.க வில் இருக்கும் அப்பாவி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட தோழர்களை ஏய்க்கும் நோக்கில் இடஒதுக்கீட்டையும், வி.பி. சிங்கையும் விமர்சித்து வரும் பார்ப்பன கும்பலுக்கு பெ.தி.க தோழர்களை விமர்சிக்கும் உரிமை எள்ளளவும் கிடையாது. பார்ப்பனத் தலைமையை வெட்கமின்றி - எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டு ஊர்வலங்களில் மட்டும் “இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின் செல்லாதே” என அர்த்தமின்றி முழக்கமிடும் அப்பாவித் தொண்டர்களல்ல பெ.தி.க தோழர்கள். திருப்திப்படுத்த வேண்டுமென்றால் ம.க.இ.க என்ற இந்தப் பார்ப்பனக் கம்பெனியை மறைமுகப் பார்ப்பனீயம் என்று தயங்கித் தயங்கி விமர்சிக்காமல் வெளிப்படையான பார்ப்பன கம்பெனி என பெரியார்முழக்கம் அறிவித்திருக்க வேண்டும். ம.க.இ.க வின் பார்ப்பன நிலைப்பாடுகளை அவ்வப்போது அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதால்தான் பெ.தி.க தோழர்கள் திருப்பியில்லாமல் இருக்கிறார்கள். இதை முதலில் ஸ்ரீரங்கப் பார்ப்பனர் புரிந்து கொள்ள வேண்டும்.

“வி.பி.சிங்கை விமர்சிப்பதையும், இடஒதுக்கீட்டில் மாற்றுப் பார்வை வைத்திருப்பதையும் மட்டும் வைத்து ஓர் அமைப்பின் பார்ப்பனிய எதிர்ப்பை அளவிடுவதுதான் பகுத்தறிவுப் பார்வையா?”

அளவிட வேண்டியது பார்ப்பன எதிர்ப்பை. அதற்கு அளவு கோலாக வைத்திருப்பது இடஒதுக்கீட்டை. பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் பலவித நடவடிக்கைகளில் ஒன்று இடஒதுக்கீடு. அந்தப் பிரச்சனையில் ஒருவன் என்ன நிலைப்பாடு எடுக்கிறானோ அதை வைத்து அவனை எடை போடுவதுதான் மிகச்சரி. இடஒதுக்கீடுப் பிரச்சனையில் ம.க.இ.க ஒரு பார்ப்பனக் கும்பல்தான் என்பதை நிரூபித்துவிட்டது. இதில் மட்டுமல்ல, இன்னும் பல நேரங்களில் தன்னை பார்ப்பனக்கம்பெனி என்றே உறுதியாக்கியுள்ளது. தனது ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் பார்ப்பனக் கருத்தியலைத் தான் மகஇக கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பெரியார் திராவிடர் கழகத்தின் பழனி தோழர் மௌ.அர. சவகர் அவர்கள் எழுதி அனுப்பியுள்ள ஒரு கட்டுரையைப் முதலில் படியுங்கள்.

ம.க.இ.க. தோழர்களுக்கு மட்டுமல்ல

தற்போது ம.க.இ.க.வும் பெரியார் திராவிடர் கழகமும் இணையத்திலும் இதழ்களிலும் மோதத்தொடங்கியுள்ளன.ஆரம்பம் தோழர் மதிமாறனிடம் தொடங்குகிறது. பின் அது படிப்படியாக பெரியார் திராவிடர் கழகம்என்பதிலிருந்து பெரியாரிடம் வந்து சேர்ந்து உள்ளது.வரவேற்கிறோம்.ஏனெனில் இதுதான் ம.க.இ.க.விற்கும் பெரியார்திராவிடர் கழகத்திற்கும்(பெரியார்) உள்ள உண்மையான முரண்பாட்டை வெளிக்கொணரும்.அந்த வகையில் தோழர்.இரயாகரன் அவர்களுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.ஏனெனில் அவர்தான் 5 கேள்விகளை முன் வைத்து அதற்கு தங்களதுநிலைப்பாட்டையும் வைத்துள்ளார்.

1) பிறப்பில் பார்ப்பானாகப் பிறந்தவன்பார்ப்பனியத்தை எதிர்த்து போராட முடியாதா?

2) பெரியாரின் பார்ப்பனிய(சாதி) ஒழிப்பு எப்படி எந்த வழியில் சாத்தியமாகும்?

3) பெரியாரியஅமைப்புகள் சாதியை (பார்ப்பனிய) ஒழிப்பை எப்படிநடைமுறையில் வைக்கின்றன?

4) ம.க.இ.க.பார்ப்பனியத்தை எந்த வகையில் ஆதரிக்கின்றது?

5) வி.பி.சிங்கின் அரசியல் என்ன?

இதற்கு அவர்களது நிலைப்பாடு:

1) பிறப்பால் உயர்சாதியில் பிறப்பவன் சாதி அடையாளத்தை இழந்து அதற்கு எதிராகப்போராட முடியும்.இதை மறுப்பது சாதிய சித்தாந்ததை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனிய்ம்தான்.

2) பெரியார் சாதிய சமூக அமைப்பின்மேல் அதை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் மேல் விமர்சனம் செய்தவர்.இதன் மூலம் சமூகத்தை விழிப்புறச் செய்தவர்.இதற்குமேல் சாதியை ஒழிக்க அவரால் வழிகாட்ட முடியவில்லை.

3) பெரியார் இயக்கத்திடம் சாதியை ஒழிக்கத் திட்டம் கிடையாது.விழிப்புணர்வு பிரச்சாரம் தாண்டி சாதியை ஒழிக்கும அரசியல் திட்டம் கிடையாது.

4) ம.க.இ.க. சாதியை ஒழிக்கும் அரசியல் வழியைக்கொண்டுள்ளது.அது பார்ப்பனியம் என்றால்,அதை எப்படி ஏன் என்று விளக்குங்கள்.இட ஒதுக்கீடுத்திட்டம் ஒரு கொள்கை ரீதியாக வைத்துள்ளனர்.அது தவறு என்றால் ஏன் எப்படி என்று விளக்குங்கள்.

5) வி.பி.சிங் இந்தியாவின் பார்ப்பனிய சமூக அமைப்பின் ஒரு ஆளும் வர்க்க பிரதிநிதி.அரசியல் இருபுக்காக சமூகக் கொந்தளிப்பை தவிர்க்கச்செய்யும் சீர்திருத்தங்கள் சமூகத்தை மாற்றுவது இல்லை.

நன்றி தோழரே!தங்களது எல்லாக்கேள்விகளும் தங்களது நிலைப்பாடும் நமது அடிப்படை முரண்பாடின்மீதே நிற்கிறது.பார்ப்பனர் என்பது த்ங்களைப் பொறுத்தவரை ஒரு உயர் சாதி மட்டுமே.அதாவது நிலபிரபுத்துவத்தின் இந்திய வடிவம் அதுவும் பார்ப்பனர் அல்ல பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை அவ்வளவே. பார்ப்பனர் என்பது நாயக்கர்,கவுண்டர்,வன்னியர்,பிள்ளைமார் போன்ற ஒரு உயர் சாதியினரே இதுதான் தங்களது நிலைப்பாடு. தங்களது நிலைப்பாட்டின்படி இங்கு ஆளும் வர்க்கம்

“அமெரிக்கத் த்லைமையிலான மேல் நிலை வல்லரசுகள்,தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம்,நிலபிரபுத்துவம்”

இதைப்பார்க்கும்முன் முதலாவது கேள்விக்கான பதிலை பார்ப்போம்.காலகாலமாக அடிமைப்படுத்திவரும் பார்ப்பன சுரண்டல் அமைப்பில் பார்ப்பனர்மீதான நம்பிக்கை துளியும் இல்லை.மாறாக அவர்கள் எமது போராட்டக்களத்துக்கோ அல்லது எமது கொள்கை வழி நடைமுறைக்கு ஊறு விளைவிக்காத ஆதரவோ கொடுத்தால் அதை உபயோகிப்பதில் எந்தத் தடையும்மில்லை.மாறாக இதையே உபயோகித்து மீண்டும் தலைமையைக் கைப்பற்றினால் என்னவாகும் என்ற வறலாற்று ரீதியான அனுபவந்தான் பார்ப்பனரை அமைப்பில் உறுப்பினராக்க மறுக்கிறது.திராவிட இயக்கத்தில் தோழர்.அண்ணாத்துரை செய்த திராவிடர் என்கிற பதத்தில் ‘ர்’அய் நீக்கியும் பார்ப்பனர் எதிர்ப்பு என்கிற பதத்தை ‘பார்ப்பனியம்’ என்றும் மாற்றியதன் விளைவுதான் அந்தத் திராவிட இயக்கத்திற்கு ஒரு பார்ப்பன பெண்மணி தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டது.மேலும் பார்ப்பனியத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் போராடவேண்டும் என்பதுதான் எமது ஆசையே.அப்படிப்போராடுகிறவர்களும் போராட்டக்களத்திற்கே வரட்டும். மாறாக இயக்கத்தை முடிவு செய்ய ததுவதை வடிவமைக்க பார்ப்பனர்கள் தேவையே இல்லை.இதுதான் எமது நிலைப்பாடு.

சரி அடுத்ததாக த்ங்களது ஆதிக்கச்சக்தி பற்றிய நிலைப்பாட்டிற்கு வருவோம்.ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவம் இதனூடாக நிலபிரபுத்துவம். நிலபிரபுத்துவம் இங்கு என்னவாக உள்ளது? பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை.அப்படியானால் நிலபிரபுத்துவமும் பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறையும் ஒன்றா? இதில்தான் சிக்கல் தொடங்குகிறது.இது நிலபிரபுத்துவம்தானா அல்லது இந்தப்பெயரால் பார்ப்பனச் சுரண்டல் மறைக்கப்படுகிறதா?பார்ப்போமா!மார்க்கிய அடிப்படையான நிலபிரபுத்துவம்தான் இது சற்று மாறுதலுக்கு உட்ப்பட்டதுஎன்பது போலத்தான் இந்த விளக்கம் உள்ளது.சுமார் 2000 ஆண்டுகளாக ஒரே சமூக அமைப்பாக இருந்த இந்த சமூக அமைப்பு அதாவது எந்த சமூக மாற்றதிற்கும் உள்ளாகாத (அசோகர்,களப்பிரர் ஆட்சிகளில் மட்டும் சற்று அசைந்து கொடுத்தது)சமூகமாக இருந்து வந்தது(வரலாற்றுத் தேக்கம்) தங்களது. கூற்றுபடி நிலபிரபுத்துவம் எனில் என்ன நடந்திருக்கவேண்டும் அடுத்த சமூக மாற்றத்திற்குச் சென்றிருக்க வேண்டுமல்லவா? மாறாக என்ன நடந்தது? எந்தமாற்றமுமே நடக்கவில்லை.ஏன்?வெள்ளையர் வருகைக்கு முன் 54 தேசங்களாக இருந்த(சமஸ்தானங்களாக) நம் நாடு நிர்வாக வசதிகளில் வேறுபட்டு இருந்தாலும் சமூக அமைப்பால் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.மிகப் பெரும்பான்மையான உற்பத்திமுறை விவசாயம்தான்.மன்னர்களும்,செல்வத்தர்களும் இருந்தனர்.முக்கியமாக சாதி முறை வருணாச்சர்ம அடிப்படையில் நடைமுறையில் இருந்தது.என்ன நடந்திருக்க வேண்டும்? நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகள் உபரி உற்பத்தி அபகரிப்பின் காரணமாக முரண்பட்டு(பகை) மோதி அடுத்தச் சமூக அமைப்புக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லவா?அது நடந்ததா? இல்லையே.இன்னும் சொல்லப்போனாலஆதிக்க வர்க்கம் தன் மூளைஉழைப்பையும்(யுக்தி) முதலீட்டையும் செலுத்தி உபரி உற்பத்தி அபகரிப்பை அதிகரிக்கச் செய்யும் முயற்சியே வர்க்க மோதலின் அடிப்படை.அதிகார வர்க்க நலனுக்கான யுக்தியும்,வர்க்க மோதலும அடுத்தபடி நிலைக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டுமே!அது நடந்ததா? இல்லையே! மாபரும் வரலாற்றுத் தேக்கம் தானே நிகழ்ந்தது.ஏன் என்பதை பின்னர் பார்ப்போம்.

முதலில் இச்ச்மூக அமைப்பை நிலபிரபுத்துவம் என அழைப்பது தேவை இல்லாத ஒன்று என்பது தெளிவு. அப்படியானால் இது என்ன சமூக அமைப்பு?அதாவது என்ன சுரண்டல் முறை? இம்மண்ணில் உள்ள சுரண்டல் முறை “பார்ப்பனிய உற்பத்திமுறை”.அது என்ன பார்ப்பனிய உற்பத்திமுறை?

நிலபிரபுத்துவ உற்பத்தி முறையில் நிலபிரபு !---முதலாளித்துவ உற்பத்தி முறையில் முதலாளி!--- இவர்கள்தான் பிரதானமாய் உபரி உற்பத்தியை அபகரிப்பர்.உற்பத்திமுறையும் அதற்கேற்றாற் போல் அமைந்திருக்கும் ஆனால் ந்ம் நாட்டில்??

இன்றும் கூட கண்டதுண்டா கண்டதுண்டா கல் உடைக்கும் பார்ப்பானைக் கண்டதுண்டா????கண்டதுண்டா கண்டதுண்டா நாற்று நடும் பார்ப்பனத்தியைக் கண்டதுண்டா???? கண்டதுண்டா கண்டதுண்டா மலம் அள்ளும் பார்ப்பனைக் கண்டதுண்டா????

இல்லையே .இது எதைக்காட்டுகிறது?உடல் உழைப்பில் இச்சமூகம் இல்லாமலேயே சுரண்டலை அமல்ப்படுதி வந்துள்ளது.வருகிறது.ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக சமூகம் தேங்கிக்கிடந்ததாகச் சொன்னோமே காரணத்தைப் பார்ப்போமா!எந்த ஒரு சமூகத்திலும் ஆதிக்கச்சக்தி தன் சுய லாபத்திற்காக [உபரி உற்பத்தி அபகரிப்பின் அளவை அதிகப்படுத்த] உற்பத்திக்கான யுக்தி,முதலீடு இவற்றில் உயர் நிலை மாற்றம் செய்வர்.ஆனால் நம் நாட்டில்,விவசாயம்,நெசவு வேலை,மண்பாண்டம் செய்தல் போன்று ஒவ்வொரு தொழிலும் யார் யார் ஈடுபடுவது என்பதை அவர்கள் சாதியே நிர்ணியத்தது.உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாது பார்ப்பனர்கள் மேலே சொன்ன பொருள் உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பதில் முதலிடம் பெற்றார்கள்.அதாவது உற்பத்தி விசைகளான மனிதர்களை சாதியே நிர்ணயித்தது.இங்குதான் நிலபிரபுத்துவம் என்பது பொருத்தமற்ற வார்த்தை என்பது புல்னாகும்.

மார்க்கிய கண்ணோட்டத்தில் சாதி கருத்தியல் கூறு[மேல் கட்டு மானம்]ஆனால் நம்நாட்டில் உற்பத்தி விசைகளான மனிதர்களை சாதி நிர்ணயித்தபோதே சாதி பொருளியல் கூறு என்றாகி விட்டது[கீழ் கட்டுமானம்]. இதைத் தோழர் பெரியார் மிகச்சரியாக,”மக்களைச் சாதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு சாத்க்கும் இன்னின்ன தொழில் என்று கற்பித்து அந்தத் தொழிலை அந்தந்தச் சாதி தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டியதுதான் மனித தர்மம் என்கிறதான நிர்பந்தம் இங்கு இருந்த்து வருகிறது”.

குடி அரசு:-07.06.31

மேலும் உற்பத்திமுறையில் சாதியின் ப்ங்கு பொருளாதாரச் சுரண்டலுக்கு எவ்வாறு அடிப்படையாக இருந்தது என்பதைத் தோழர் பெரியார்,

”வர்ணாசிர்ம தர்மப்படி இன்னின்ன வகுப்புகளுக்கு இன்னின்ன தொழில்[உற்பத்தி விசைகள்]இன்னின்ன உரிமைகள்[உற்பத்தி உறவுகள்]என்பதான திட்டமே நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கு இல்லாமல் தடைப் படுத்திக் கொண்டிருக்கிறது.”

குடி அரசு :-13.09.31

மற்ற சமூக முறையில் ஆதிக்கச்சக்திகள் உற்பத்துயோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும்.ஆனால் பார்ப்பனிய உற்பத்திமுறையில் அவ்வாறு இல்லை என்பதே மற்ற ஆதிக்கச்சக்திகளுக்கும் பார்ப்பன ஆதிக்கச்சக்திக்கும் உள்ள வேறுபாடு.பார்ப்பனர்கள் உபரிஉற்பத்தி அபகரிப்பின் ஆதிக்க வகுப்பாய் இருந்து சுரண்டுவதை தோழர்.பெரியார்

”மனிதனாகப் பிற்ந்தவன் எல்லாம் அதாவது எவனாவது தன்னை இந்து என்று சொல்லிக்கொண்டால் அவனை உடனெ பார்ப்பன வரிச்சனியன் பிடிதுக்கொண்டது என்பது போல கால வரையரை ஒன்றுமே இல்லாமல் கர்ப்பந்தரித்தது முதல் சகும் வரை செத்தும் விடாமல் அதாவது கர்ப்ப்மானவரி,சீமந்தவரி,பிள்ளைப் பேறு வரி,தீட்டுக்கழித்தல் வரி,வித்தியாபியாச வரி,கல்யாண வரி,சாந்திமுகூர்த்த வரி சாவு வரி,சாக 10 நாழிகை வரி ,செத்தபின்னால் வரி,செத்தவர் மக்களிடமிருந்து வருசா வ்ருசம் வரி - ஆகிய பல துறைகளில் காலாவதி இல்லாமலும் ஒரு நபரைக்கூட விடாமல் 100க்கு100 பேரிடமும் பணக்காரண் ஏழை என்ற பாகுபாடே இல்லாமல் கொடுப்போர் முட்டாள்தனத்திற்கும் களிமண் மூளைக்கும் தகுந்தாற்போல் வரி கறந்து விடுகிறார்கள்”.

குடிஅரசு :-09.01.27

இது உபரி உற்பத்தியின் மூன்றில் ஒரு ப்ங்கு. உபரி உற்பத்தியின் இரண்டாம் பகுதி யாகம்,சடங்கு கோயில் உள்ளீட்ட மூடநம்பிக்கைகளில் விரயமானது அல்லது முடக்கப்பட்டது.மூன்றாம் பகுதி வரலாற்றுத் தேக்கத்திற்கு ஆதரவு அளித்து வந்த அரசு அமைப்பு எந்திரத்தைத் தாங்கச்சென்றது.இந்த வரலாற்றுத் தேக்கத்தை சில அரசுகள் சீர்குலைவை ஏற்படுத்தினாலும்[அசோகர் மற்றும் களப்பிரர் ஆட்சி] சமுதாயத்திற்கு பொருளாதாரமும் அரசியலும் கட்டுப்பட்டு இருந்ததால் அந்த அரசுகள் மாற்றி அமைக்கப்பட்டன.

இதையே தோழர்.மார்க்ஸ் ,

”எல்லா மக்கள் போராட்டங்களும்,அந்நிய படையெடுப்புகளும்,வெற்றிகளும்,கடும் பஞ்சங்களும் இந்திய சமூக அமைப்பின் மேல்தட்டுப் பரப்பினை மட்டுமே தொட்டன.மேற்சொன்னவை இந்துஸ்தானின் அடுத்தடுத்த செயல்கள் போலவே கடும் சிக்கலாகவும் திடீர் எனவும்,அழிப்பதாகவும் தோன்றினாலும் இதுதான் நிலைமையாக இருந்துவந்துள்ளது”.

[British Rul in India – Karl Markx]

காலனி ஆதிக்கத்தின் போது ,பிரிட்டனின் வருகையால் ,அபோது இருந்த உபரி உற்ப்த்தி அபகரிப்பின் தன்மையோடு காலணியச்சுரண்டல் குறுக்கிட நம் சமூகத்திலும் அரசியல்,பண்பாடு மற்றும் பொருளாதார அரங்குகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுத்தியது.இதனால் அத்திரம் அடைந்த பார்ப்பனர்கள் இயற்கையாகவே அந்நிய சக்திகளின் மேல் இருந்த கோபத்தை பயன்படுத்தியது.1857 சிப்பாய் கலகம்.

“லார்டு டல்ஹெளசியின் சீர்திருத்தங்கள்,ஒரு சிலரான பார்ப்பனருக்கு ஏகபோக உரிமையாக இருந்த கல்வியை நாடெங்கும் எல்லோரும் படித்து ப்யன் பெறும் வண்ணம் பரப்பிய முறையும்,இரயில்,நீராவி எஞ்சின்,தந்தி சாதனம் போன்று முறைகளைப் புகுத்தியமை போன்ற சீர்திருத்த்ங்களையும் கண்டு வைதீக மேல்சாதிக்காரர்கள் என்பவர்கள் வெகுண்டார்கள்.இத்தகைய அறிவு வளர்ச்சி,தங்களுடைய ஆதிக்கத்திற்கு எங்கு உலை வைத்துவிடுமோ என்றஞ்சி எதைச் செய்தால் இவைகளை ஒழித்துக்கட்டலாம் என நினைத்து அதைக் கண்டுபிடித்து பாமரம்க்களான,சிப்பாய்களாக இருந்த வைதீக மனப்பான்மையாளர்களை,’உங்கள்சாதியும்,மதமும் ஒழிந்துவிட வெள்ளையன் ஏற்பாடு செய்கிறான்’என்றுகூறி வெள்ளைக்காரர்களை எதிர்க்கச்செய்தனர்.இந்தச் சீர்திருத்த்ங்களும் விஞ்ஞானக்கல்வியும் பரவினால் எங்கே சாதி முறையும் அதையொட்டி அமைந்துள்ள கீழ் சாதி மக்களின் பணிவும்,அடிமைத்தனமும் மாறிவிடுமோ என்ற சுயநல எண்ணதின் பேரில்தான் மற்றவர்களைத் தூண்டினர்.’துப்பாக்கிகளில்க் கொழுப்பை தடவிக்கொடுத்தனர்,என்ற குற்றச்சாட்டிலும் கூட இந்துச் சிப்பாய்களிடம் அது பசு மாட்டுக்கொழுப்பு என்றும் முஸ்லீம்களிடம் அது பன்றிக் கொழுப்பு என்றும் பிர்ச்சாரம் செய்தது.அவரவர்களுக்கு உள்ள மத உணர்ச்சிகளையும் அதனடிப்படையாகப் பிறந்த மூட நம்பிக்கையையும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது.மேற்கண்ட உண்மைகளைவைத்துப் பார்த்தால்,1857 கிளர்ச்சி வெள்ளையனுடைய ஆதிக்க வாழ்வை எதிர்த்து ஏற்பட்டதன்று என்பதும் அவனுடைய சீர்திருத்தங்களினால் விளைந்த பலன்களை எதிர்த்தே ஏற்பட்டது என்பதும் புலனாகும்”.

தோழர் பெரியார், விடுதலை :-15.08.1957

இதன் பின் செய்த ஒப்பந்தம் என்ன? மத விவகாரக்களில் வெள்ளையன் தலையிடக்கூடாது என்பதுதானே!அரசியல் மற்றும் பொருளாதாரம் இரண்டும் சமூகம் பெற்ற பிள்ளைகள்ட் என்ற அடிப்படையில் சமூகம் தன் கையில் உள்ளது என்பதால் அரசியலையும் பொருளாதாரத்தையும் மாற்றி அமைக்கும் சக்தி தனக்குண்டு எனப் பார்ப்பனக் கூட்டம் நிரூபித்தது.இதன் முடிவாக உருவான வரலாறு பார்ப்பனர்களுக்கும் காலனியத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஊடல் கூடல் தொடர்பாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிப் போக்கின்போது இந்த புதிய விளைவின் எதிர் பலன்களை அனுபவிக்க ஒரு வித்தியாசமான தொழில் வியாரப் பிரிவினர் த்ன்றினர்.அவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பனியத்திற்கும் காலனியத்திற்கும்நண்பர்க்ளாய் விளங்கினர்.இந்தப் புதியவிளைவின் நேரானபலன்கள்[Positivi] சமுதாயத் தேக்கத்திற்குஅபாயகரமாக அமைந்தது.இத காரல் மார்க்ஸ்,

”இங்கிலாந்தின் குற்றங்கள் எவையாக இருந்தாலும் இந்திய சமூக அமைப்பில் ஒரு அடித்தளப் புரட்சியைக் கொண்டு வருவதில் வரலாற்றின் சுய நினைவற்ற கருவியாக இங்கிலாந்தும் செயல்பட்டது.”

[The Biritish Rule in India]

சமூகத்தேக்கத்திற்கு அபாயமக உருவெடுத்த இந்த புதியபலன்களின் நடைமுறை வளர்ச்சி தமது ஆதிக்கத்திற்கு ஆபத்தாகிவிடும் என பயந்தனர்.அவர்கள் எதிர் பார்த்தது போலவெ உருவானதுதான் நீதிக்க்ட்சி.எனவேதான் ஊடகங்கள் அனைத்தும் நீதிக்கட்சியை வெள்ளையன் அடிவருடி எனப் பிரச்சாரம் செய்தது,செய்தும் வருகிறது.மேலும் காலனிய பாதிப்பால் இங்கு முளைவிட இருந்த தேசிய இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எறியபார்ப்பனர்கள் இந்த்திய தேசியத்தை உருவாக்கினார்கள்.இந்தத்தேசியத்திற்கு புதிதாக உருவான வியாபாரப்பிரிவினர் ஆதரவும் தந்தனர்.உண்மையான தேசிய இயக்கங்கள் முதலில் பார்ப்பனியத்திற்கு எதிராக முளைவிட்டாலும் இறுதியில் காலனியத்திற்கு ஆபத்தாக முடியும் என்பதால் காலனியவாதிகள் ‘இந்திய தேசியத்தையே’ விரும்பினர்.எனவே பார்ப்பனிய காலனிய நலன்களுக்குப் பாலமமைக்கும் முயற்சியாக இந்திய தேசியக் காங்கிரஸ் உருவானது.இருந்தாலும் தவிர்க்க இயலாமல் ஏற்பட்ட உபரி உற்பத்தி அபகரிப்புப் போட்டியால் வரலாற்றுத் தேக்கம் அரிக்கப்பட்டதன் காரணமாக சாதி எதிர்ப்பு பார்ப்பனர் எதிர்ப்பு மற்றும் உண்மையான தேச மற்றும் சோசலிச இயக்கங்கள் உருவெடுத்தன. சமுதாயத் தேக்கத்தின் பொருளியல் அடித்தளம் அரிக்கப்படுவதைத்தடுக்க’இந்திய தேசியவாதிகள்’மேற்கொண்ட சூழ்ச்சியே இந்திய தேசிய விடுதலயாக சித்தரிக்கப்பட்டது.

இந்தப் பார்ப்பனச் சுரண்டலை மறைத்து நிலபிரபுத்துவம் எனகூறுவது யாரைக் காப்பாற்ற?இல்லை இல்லை நாங்கள் பார்ப்பனிய சாதியஒடுக்குமுறையைத்தான் கூறுகிறோம் என்றால் இந்தப்பதத்தை உபயோகிக்க வேண்டியதுதானே?அப்புறம் என்ன நிலபிரபுத்துவம் என்ற வார்தை?????

சரி தற்போது………..தற்போதும் சமூகத்திற்குக் கட்டுப்பட்டே அரசியலும் பொருளாதாரமும் உள்ளது.1947க்குப் பின் அதிகாரம் முழுமையாக பார்ப்பனர்களுக்குப் போய் சேர்ந்தது.அந்த வியபாரப்பிரிவினர் இந்திய தேசிய்ம் காக்கும் முதலாளிகள் ஆயினர்.அதாவது இந்தியதேசிய முதலாளிகள் ஆயினர்.அதுவரை பிரிட்டன்மட்டுமே இந்நாட்டைக் கொள்ளை அடித்துவந்த அந்நியதேசம் என்பதுமாறி பன்னாட்டுச் சக்திகளும் களம் இறங்கின.[இந்திய விடுதலையில் அமெரிக்காவின் ஆர்வம்,நேருவின் அமெரிக்க நட்பு] எனவே இங்குபார்ப்பன-இந்திய தேசிய-பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளை என வடிவம் பெற்றுள்ளது. இதிலும் பிரதானமாக பார்ப்பனரே உள்ளனர்.இந்தப் பார்ப்பனகட்டமைப்பின் மேல் அமர்ந்துள்ள மற்ற சுரண்டல் அமைப்புகளும் தாங்களது பாதுகாப்பு என்பது பார்ப்பனக் கட்டமைப்பின் வலிமையைப் பொறுத்ததே என உணர்ந்துள்ளதால்தான் ஆரம்பத்தில் காக்கிரஸுக்கு கொடுத்து வந்த ஆதரவில் பெரும்பான்மையை பி.ஜே.பி. போன்ற நேரடி பார்ப்பன அமைப்புக்குத் தருகின்றனர்.இந்த அரசு அமைப்பில் பார்ப்பன ஏகபோகம் இருப்பதுதான் நல்லது என்பதால் இடஒதுக்கீடு என்றவுடன் தகுதி திறமை எனக்கூச்சலிடுகின்றனர்.இந்தப்பார்வையோடுதான் இட ஒதுக்கீடு,வி.பி.சிங் மற்றும் மண்டலைப் பார்க்க வேண்டும்.அரசு அதி காரங்களில் ஏற்படும் பன்மைத் தன்மை என்பது ஆதிக்கதிற்கு ஆப்பு வைக்கும் என்பதாலேயே மண்டலைக் குழி தோண்டிப் புதைக்கத்துடித்தனர்.மண்டலுக்கு எதிராக நடந்த யத்திரை மீண்டும் சிப்பாய்கலகத்தை நினைவுபடுத்துகிறது.

பார்ப்பனருக்குப் பாதகமான சூழல் வெள்ளையரால் ஏற்படுவதைத் தடுக்க எப்பட் சிப்பாய்க் கலகமோ அதைப்போலத்தான் அத்வானியின் ரத யாத்திரை.மதம் கையில் எடுக்கப்பட்டவுடன் தமிழகம்,உ.பி.,பீகார் தவிர்த்து இந்தியா முழுதும் ராமன் உயர்த்திப் பிடிக்கப்பட்டான்.மண்டல் மண்ணைக்கவ்வியது.ஆனாலும் அதன் விளைவுகள்பார்ப்பன ஏகபோகத்தை அகில இந்திய அளவில் வெளிக்கொணர்ந்தது.தற்போதுதனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்ற நிலைபாடு அரசியல் தளங்களில் பிரதிபலிக்கக்காரணம் மண்டலே. இந்த மண்டல் அறிக்கையை வி.பி.சிங்.வந்துதானே அமல்ப்படுத்தினார்.அதுவும் அரையும் குறையுமாக- காரணம் என்ன.பார்ப்பன நெருக்கடி.

பார்ப்பனிய சமூக அமைப்பின் ஆளும் வர்க்கப் பிரதிநிதி ஒருக்காலும் அரசு அதிகார மய்யத்தின் ஆளும் சக்தியை ஒரு போதும் பார்ப்பனர்களிடமிருந்து பிரிக்க அதற்கு முயற்சி செய்யவே மாட்டார்கள்.அப்படியிருக்க வி.பி.சிங் ஏன் அதைச் செய்ய வேண்டும்?மேலும் பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் சம்மம் இல்லை. மாறாக ஒருவர் மீது ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.மேலே இருப்பவன் பார்ப்பான்.அடுத்தடுத்துள்ள மக்கள் படிப்படியாக உரிமை இழந்துள்ளனர்.சம்மில்லாம்லும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டும் அதேசமயம் தனக்குக்கீழ் உள்ள சாதியினரின் ஒடுக்கலுக்கு துணையாகவும் இருந்து வருகின்றனர்.அவர்கலது விடுதலையில்தான் தம் விடுதலை என்பதை உணராமலும் உள்ளனர்.இது பிற்படுத்தப்ப்ட்டவருக்கு ம்ட்டும்ல்ல தலித்துகளுக்கும் பொருந்தும்.எனவேதான் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெறுகிறது.இந்திய தேசிய அரசியலில் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் எப்போது வந்தது?மண்டலுக்குப்பின்னர்தானே?

30 வருடங்களுக்கு முந்தைய அரசியலும் தற்போதைய அரசியலும் எவ்வளவு மாறுட்டுள்ளது.மாயாவதி என்கிற தலித் பெண்மணி அதுவும் உ.பி.ல் முதல்வர் ஆவது எப்படி சாத்தியம் ஆயிற்று?அவர் பார்ப்பனரோடு சமரசம் வைத்தலும் ஒரு தலித்தை தத்லைமை எற்க பார்ப்பனச்சமூகம் அக்கீகரித்து இருக்குமா?சமூகக் கொந்தளிப்பை தவிர்க்க வி.பி.சிங். இதைச்செய்தார் என்றால் அப்போது இருந்த சமூகக் கொந்தளிப்பு என்ன கொந்தளிப்பு?அவர் அரசியல் இருப்புக்காக இதைச் செய்தார் என்றால் - உண்மையைச் சொல்லப்போனால் அதற்குப்பின்னர்தானே அரசியலிலேயே அவர் காணாமல்ப் போனார்.மேலும் எனக்கு தரக்கூடாது என்று தடுக்கப்படுகிற விசயம் என்பது என்னுடைய உரிமையா அல்லது சலுகையா? கல்வி என்பதும் சமூக சமம் என்கின்ற உரிமையும் என்னுடைய உரிமைதானே?நான் சலுகை கேட்டால் அது சீர்திருத்தம் ஆனால் நான் கேட்பதோ உரிமை அது சமூக தலைகீழ் மற்றம்.நான் ப்றைதான் அடிக்க வேண்டும் என்பதை மாற்றி கலெக்டராக அமர்வது பார்ப்பனச்சமூக அமைப்பில் தலை கீழ் இல்லையா?நான் பனைதான் ஏற வேண்டும் என்பதை மாற்றி தாசில்தாராக அமர்வது சமூக மாற்றமில்லையா?நான் சூத்திரனாய் கஞ்சிக்கலையத்தோடு வயல்காட்டு வெள்ளாளனாய் திரிந்த நான் ஆலய அதிகாரியாக இருப்பது இந்தப் பார்ப்பனச் சமூக அடையாளதை அடித்துப்புரட்டிப் போடுவது இல்லையா?நான் செருப்பு தைப்பதை மாற்றி ஆர்.டி.ஒ.வாக இருப்பது சமூக மாற்றமில்லையா?இந்தச் சமூகம் தங்களது வர்க்கப் புரட்சிவரை மாறாமல் அப்படியே இருக்க வேண்டுமா?அப்படி மாறாமல் இருந்தால்தான் சரி இல்லையென்றால் நான் இந்தத் தரகு முதலாளித்துவ அமைப்பின் அங்கம் அல்லது எடுப்டி அப்படிதானே தோழரே?

இதற்கு இடஒதுக்கீடு தேவை இல்லையா?அதுவும் பிற்படுத்தப்பட்டவருக்குத் தேவையே இல்லையா?தங்களது இடஒதுக்கீட்டுக்கொள்கையை ஒருத் திட்டமாக வைத்துள்ளீர்கள்.அது தங்களது வெளீயீடான ‘சாதி தீண்டாமை ஒழிப்பு:நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’என்ற புத்தகத்தின் அடிப்படையில்தானே உள்ளது? அதை நிரூபிக்கும் வகையில் தங்களது புதிய ஜனநயகத்தில் பெ.தி.க.மீதான விமர்சனம் வந்துள்ளது.அதாவது

“அரசு ஒடுக்குமுறை எந்திரத்தில் இட ஒதுக்கீடு கேட்டு நாம் போராடுவதில்லை.அதே சமயம் ,பார்ப்பன மேட்டுகுடி கும்பல் இடஒதுக்கீட்டினை எதிர்ப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.”பு.ஜ.ஏப்ரல் 2009

அதாவது இடஒதுக்கீடு இருந்து தொலையட்டும்.அது ஒரு பெரிய விசயம் அல்ல.ஆனால் அதை எதிர்க்கும் குரல் வந்தால் கடுமையாக எதிப்போம்.ஏனெனில் அது ஒரு சலுகையே.இதுதானே தங்களது நிலைப்பாடு.மேலும் அக்கட்டுரையில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பார்ப்பன - மேட்டுக்குடியினரின் சாதிச் சண்டை என எழுதி தங்களது நிலைப்பாடு அப்புத்தகதிலிருந்து மாறுபடவில்லை எனக்காட்டியுள்ளீர்கள்.

சரி அதனடிப்படையி ஏற்கனவே கேட்க்கப்பட்ட கேள்விகளை த்ற்போது மீண்டும் வைக்கிறேன்.ஏனெனில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களினொற்றுமையை வளர்ப்பதற்கான வழி முறையை பின்பற்றாமல் அவர்களின் மோதலைத் தூண்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் ம.க.இ.க.விடம் சில கேள்விகளை முன் வைக்க வேண்டியுள்ளது.

1) தீண்டாமை இழிவுதொழில் அடிப்படையில் வந்ததல்ல- அம்பேத்கார்.ஆனால் ம.க.இ.க.வின் நிலைப்பாடு ‘தீண்டாமை இழிவுத்தொழில் அடிப்படையில் ஆனது’என்பதாகும்.

2) தாழ்த்தப்பட்டோர்மீதான அடக்குமுறை கொடுமைகளுக்கு ‘ஆதிக்க வெறியையும்,அதிகாரத் திமிரையும் இவர்களுக்கு வழ்ங்கியது தீண்டத்தக்க சாதி இந்துக்கள்தான்’என்கிறதும.க.இ.க. அப்படியானால் இங்கு சமூக ஆதிக்கவாதி யார்?

3)’அனைத்து ஆதிக்க சங்கஙக்ளையும் தடை செய்துவிட்டு தீண்டாமைக் குற்றம் புரியும் சாதிகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்து விட்டால் தீண்டாமை மறைந்துவிடுமா?சாதி ஒழிந்து விடுமா?

4)தீண்டாமைக் குற்றம் புரியும் நபர்களை மட்டிம் தண்டிக்காமல் அவர் சார்ந்த சாதியின் இடஒதுக்கீட்டை ரத்து செய்தால்தீண்டாமைக் குற்றம் அதிகரிக்குமா?குறையுமா?

5)பார்ப்பனர் ஒடுக்குமுறையும் சூத்திரர் ஒடுக்குமுறையும் ஒரே பார்வையில் பார்ப்பதுதான் நாணயமா?

6)ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் தீண்டாமையை ஒழிக்க வழி கூறாமல் 50 ஆண்டுகளாக உள்ள இட ஒதுக்கீட்டை ஒழிப்பதன் மோலம் தீர்வு ஏற்படுமா?இடஒதுக்கீடோ சாதிச் சங்கங்களோ இல்லாத 50 ஆண்டுகளுக்கு முன்பு சாதி ஒடுக்கு முறையே இல்லை என்று ம.க.இ.க. கூறுகிறதா?அடுத்த வேளை கஞ்சிக்கு இல்லாதவன் கையில் அரிவாளுடன் சாதி வெறி பிடித்து நிற்க வைப்பது எது?

7)‘தீண்டாமைக் குற்றம் புரியும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய் ‘என்பதுதீண்டாமைக்குக் காரணம் சாதி,சாதிக்கு ஆதாரம் இந்து மதம்.எனவே தீண்டாமையை ஒழிக்க வேண்டுமாயின் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என முழங்காமல் ‘இட ஒதுக்கீட்டை ரத்து செய் ‘என்பது பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.,சங்கராச்சாரிகளின் உள்நோக்கத்தோடு ஒத்துப் போகிறதே?இது சரியா?

8) ‘இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த்ங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமை ஒழிப்புக்கு தீர்வாகாது’என்று கூறும் ம.க.இ.க. தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா?எதிற்கிறதா?

9)சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் பிற்ப்டுத்தப்பட்ட்வரிடம் மட்டுமே உள்ளதா? தாழ்த்தப்பட்டவர்களுக்குள் உள்ள -ஒடுக்குமுறையில் தங்கள் மீது பிற்படுத்தப்பட்டோர் செலுத்துவதற்கு கொஞ்சமும் குறைவில்லாதஒடுக்குமுறை தீண்டாமைக்குள்- தீண்டாமையை எக்கண் கொண்டு பார்க்கிறது?இல்லை அப்படி இல்லை என்கிறதா?

10)’இழி தொழில் செய்வதால் தலித்துகள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் - ம.க.இ.க. அப்படியானால் பாபு ஜெகஜீவன்ராம் அமைச்சராக இருந்தபோதே பார்ப்பனரால் இழிவுபடுத்தப்பட்டது எதனால்?[ தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையைஎவ்வளவுதூரம் வலியுறுத்துகிறோமோ அதைவிட அதிக அளவு தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக எங்களது போராட்டம் உள்ளது.அதில் எமது தோழர்கள் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளானதும் சமீபத்திய நிகழ்வு.]

அடுத்ததாக சாதி ஒழிப்பில் பெரியார்.சாதியின் இருப்பு எதில் உள்ளது அய்யா?ஒன்று சாதியை தானே ஏற்றுக் கொள்வது மற்றொன்று அகமண முறை.முதலாவதாக சாதியை நானாக மறுப்பது.அது எப்படி சாத்தியம்?அது சம அனுபவம் மற்றும் சம நுகர்ச்சியில்தான் நானும் சமமான மனிதன் என்ற உணர்ச்சிவரும்.பெரியார் காலத்திலிருந்து ஆரம்பத்தில் பெரியார் தொண்டர்களால் ஆலய நுழைவு நடத்தப்பட்டது.ஆனால் பிற்காலத்தில் தன்னெழுச்சியாக ஆலய நுழைவு தலித் இளைஞர்களால் நடத்தப்படுகிறதே அது எப்படி?இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி கற்கப் போகும் தலித் மாணவர்கள் சம்மம் என்பதை உணர்ந்து ஆலய நுழைவு என்பது எனது உரிமை என்ற முழக்கத்துடன் செல்கிறான்.அது மட்டுமல்ல அவனது சாதி அடையாளங்கள் இழிவானவை என்றால் அதையும் அகற்றுகிறான்.இந்த நிகழ்வுகள் சாதிஒழிப்பின் கூறா இல்லையா?இது எதனால் விளைந்தது?படித்து வேலைக்குச்சென்ற தலித்துகள் தங்களது சாதி சார்ந்த இழி தொழிலை மறுப்பது மற்றும் கிராம்ங்களை விட்டு வெளியேறியவர்கள் த்ங்களது சொந்த ஊருக்கு வரும்போது தன் சமூக இளைஞரிடம் சமூக சிந்தனையை ஊட்டுவது[இமானுவேல் அவர்கள் இராணுவ்த்தி பணி புரிந்தபோது ஊருக்குவரும் போதெல்லாம் இளைஞர்களிடம் சுய மரியாதையை ஊட்டிவந்தார் என்பது வரலாறு ]இது போன்ற உதாரணங்கள் நிறைய முன் வைக்கலாம். எனவே இட ஒதுக்கீடு என்பது தானாக ஏற்றுவந்த சாதியத்தை மறுப்பது என்பதன் சமூகத்திட்டம்.

அடுத்ததாக மணமுறை.புற மணமுறை என்பது பெரியார் காலத்திலிருந்தே கட்சியின் நடைமுறை.இன்னும் சொல்லப்போனால் கட்சி மாநாடுகளில் பெண் கொடுத்து பெண் எடுத்துள்ளனர்.இது எதைக் காட்டுகிறது? புற மண முறை என்பது பெரியாரால் பெரியாரியக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதைத்தான்.விதவைத் திருமணம்,சமூக ஒடுக்கு முறைக்கு உள்ளான சமூகத்தில் பெண் எடுக்க வேண்டும் என்ற உறுதியும் நடைமுறையும் இருந்து வந்ததுஉதாரணம் [குத்தூசி குருசாமி]நிலை இப்படி இருக்க பெரியார் இயக்கத்திடம் சாதியை ஒழிக்க எந்த ஒரு திட்டமும் இல்லை என்பது எவ்வளவு பெரிய அடிப்படையில்லாக் கொச்சைப்படுத்தும் குற்றச்சாட்டு.

சரி தங்களது இயக்கத்தில் சாதி பற்றிய விளக்கம் என்ன?சாதி ஒழிப்புக்காண திட்டம் நடைமுறை என்ன?எதையுமே சொல்லாமல் பெரியார் மீது கூசாமல் கொச்சைப்படுத்துவது எதன் அடிப்படையில்?

இறுதியாக,ஆதிக்கச்சக்தியில் பார்ப்பனர் உண்டா இல்லையா என்பதில் குழப்பமான - பார்ப்பன சாதிய ஒடுக்குமுறை -என்பது

அதையும் ஒழுங்காகச் சொல்லாமல் நிலபிரபுத்துவம் எனக் கூறுவதன் அடிப்படை பார்ப்பனர் என்ற விசயத்திற்கு நிலபிரபுத்துவ சட்டை போட்டுக் காப்பாற்றுவது,

சமுக அடிப்படையில் இட ஒதுக்கிடா என்றால் இல்லை தலித்துகளுக்கு வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம் பிற்படுத்தப்பட்டவருக்குக் கிடையாது என்பது.அப்படியானால் மண்டல் அறிக்கை உடன்பாடு இல்லைதானே என்றால் இல்லை இல்லை அதைப் பார்ப்பனர்கள் எதிர்த்ததால் நாங்களும் எதிர்த்தோம் என்பது போன்றவை

தங்களது பார்ப்பன முகத்தைத் தெளிவாகத் தெரிகிறது என்பதே எமது கருத்து.இறுதியாக இவ்விவாதத்தில் காலம் கடந்து கலந்து கொள்வதால் இதைத் தொடக்கமாக எடுத்துக் கொண்டு இனி விவாதத்தைத் தொடருங்கள் தோழரே!

- மௌ.அர.சவகர்.

பழனி பெரியார் தி.க தோழரின் கட்டுரையைத் தொடர்ந்து இன்னும் சில தோழர்களும் சிறு சிறு குறிப்புகளை அனுப்பியுள்ளனர். அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, April 1, 2009

ம.க.இ.க வின் பெரியாரிய கிரகணம்

ம.க.இ.க இன்று நடத்தி வருகிற பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்கள், அது தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் ஏறுவதானாலும் சரி, தீட்சிதர்களை விரட்டும் போராட்டமானாலும் சரி, இவையெல்லாம் பெரியாரியல் போராட்டங்களே. இப்போராட்டங்களுக்காக அணிதிரட்டப்பட்ட சக்திகளும் வர்க்கக் கூட்டங்கள் அல்ல. (திமுக அரசும் போலீஸ் கூட்டமும் எந்த வர்க்கத்தைச் சார்ந்தவை?) தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் ஏற்றப்பட்ட விதத்திற்கு தி.மு.க அரசின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதை தோழர் மருதையன் பாணியில் சொல்வதானால் தோளில் ஏற்றிக்கொண்டு ஓடுவது என்பதாகச் சொல்லலாம். தோளில் ஏற்றுக்கொண்டு ஓடுவது சரி, தோளில் ஏற வேண்டுமே! ஜெயலலிதா அரசாக இருந்திருந்தால்! அந்தச் சந்தேகம் தோழர் மருதையனுக்கே இருந்திருக்கிறது. அதனை ம.க.இ.க வின் தில்லை வெற்றி (வெற்றி மாநாடு-1) மாநாட்டில் தொட்டுவிட்டுத் தொடராமல் விட்டுவிட்டார். ஏன்? அந்த சமூக எதார்த்ததை விளக்கமாக ஆராய்ந்து வெளியிடுங்கள்.

பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகனின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் தமிழகத்தில் தொடங்கப்பட்ட பார்ப்பனரல்லாதோர் நன்மைக்காக தொடங்கப்பட்ட தென்இந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி போன்ற திராவிடர் இயக்கங்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய - வரலாற்று ரீதியான சமூக சீர்திருத்தத்தின் அடித்தளம் முக்கியமானது. இந்நேரம் வடநாடாக இருந்திருந்தால் சூலாயுதத்தோடு அகோரிகளும், அம்மணக்குண்டி சாமியார்களும், சங்கப் பரிவாரமும் ரவுண்டுகட்டியிருந்திருப்பார்கள். மேலும் நீதிக் கட்சியின் ஆட்சியிலிருந்தே தொடர்ந்து பல அரசுகளால் - ஆங்கிலேய நீதிபதிகளால் தீட்சிதர்களின் தில்லையின் மீதான உரிமையை கேள்விக்கு உட்படுத்திப் பெறப்பட்ட நீதிமன்ற ஆணைகள் முக்கியமானவை. அதற்கும் முன், அனைத்து கோவில்களையும் இந்து அறநிலையத்துறையின் வாயிலாக அரசு ஏற்றதன் வரலாற்றை நீதிக்கட்சியினர் தொடங்குகின்றனர். சமீபத்தில் பெறப்பட்ட நீதிமன்ற ஆணைக்கு அடித்தளமாக இருந்ததும் அதற்கு முன் பெறப்பட்ட நீதிமன்ற ஆணைகளே. இதில் ம.க.இ.கவின் பணி இந்தப் பிரச்சனையை தாங்கள் முன் நின்று நடத்தியது. ஆனால் அவர்கள் அதற்காக தேடிக்கொள்ளும் விளம்பரம் மேற்சொன்ன எல்லா சமூகக் காரணிகளுக்கும் செல்ல வேண்டிய எல்லா பாராட்டுகளையும் அவை எவற்றிற்கும் செல்லவிடாமல் உறிஞ்சிக்கொண்டதே.

சமீபத்திய தில்லை வெற்றி மாநாட்டில் (வெற்றி மாநாடு-2), சம்பந்தமே இல்லாத கம்யூனிச மூலவர்கள் எல்லாம் வரிசையாக இருக்கப் பெயருக்குக் கூட ஒரு பெரியார் படம் இல்லையே. ஏன்? மாலை போடுவது எல்லாம் அப்பறம் இருக்கட்டும். (வேற வழியில்லை. இங்கே மாலை போடுறதுக்குத் தான் பெயரளவிற்குக் கூட மார்க்சு சிலையோ, லெனின் சிலையோ, ஸ்டாலின் சிலையோ, மாவோவின் சிலையோ இல்லையே. அது தான் சமூக எதார்த்தம்) கம்யூனிச மூலவர்களைச் சொல்லிக் கூட்டம் கூட்டவில்லையே. பெரியாரையும், தமிழையும் சொல்லிச் சொல்லித் தானே கூட்டினீர்கள். ம.க.இ.க எடுத்துச் செய்யும் வேலைகள், தில்லை போராட்டம் போன்ற பல போராட்டங்கள், எல்லாம் பெரியார் காட்டிய வழியில், பெரியார் அமைத்த களத்தில். ஆனால் சூட்டுவது எல்லாம் கம்யூனிசத்தின் பெயரை. இது தான் இருட்டடிப்பு என்பதா? அமுக்கத்தின் சூழ்ச்சி அல்லது Conspiracy of Silence. நீங்கள் திரட்டிய சக்திகள் எல்லாம் வர்க்கக் கூட்டமாக இருந்தாலாவது கம்யூனிசத்தின் பெயரைச் சூட்டலாம். ஆனால் அதுவுமில்லையே. தமிழ் மொழி மற்றும் இனம், அதற்கு எதிரான பார்ப்பன பாசிசத்தை எதிர்க்கும் சக்திகளின் பங்களிப்பு தானே பெரிதும் ஒத்துழைத்தன. இல்லையென்று நிரூபிக்க முடியுமா?

ஈழப் பிரச்சனையில், இன எழுச்சியில் கொந்தளிக்கும் தமிழர் கூட்டத்திற்கு, தேசிய இனங்களை ஒடுக்கும் பார்ப்பன பாசிச இந்தியாவை முன்னிலைப் படுத்தி எதிர்க்காமல் தரகு முதலாளிக் கூட்டத்தை முன்னிலைப்படுத்தும் வர்க்கப் பாசம் கொண்ட இந்தியாவை எதிரியாக முன்னிலைப் படுத்துவது ஏன்? நாமும் தரகு முதலாளிக் கூட்டத்தை எதிர்க்கிறோம். ஆனால் ஈழப் பிரச்சனையில்? தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் 2000-யில் வந்தது. அதற்கும் முன் இந்திய சதி என்பது 25 ஆண்டுகள் பழமையானது. அதில் வர்க்கப்பாசம் இல்லையே. பார்ப்பனப் பாசிசம் தானே ஈழத்தைக் கருவறுத்தது. பார்ப்பன அதிகாரிகள் அதில் முக்கியமானவர்கள். இன்றளவில் கூட இந்தியத் தரகு முதலாளிக் கும்பல் இலங்கையில் இல்லாமல் இருந்தாலும் இது தானே நிலை. எனவே அடிப்படையாக மூல காரணமாக இருப்பது தேசிய இனங்களை ஒடுக்கும் பார்ப்பன பாசிச இந்தியா. ஆக அதுதான் பிரதான அரசியல். அது ஏன் முன்னிலைப்படுத்தப்படவில்லை?

ம.க.இ.க வின் விளம்பரத் தாகம் பெப்சி, கோக்கையும் மிஞ்சிவிட்டது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் எல்லா அமைப்புகளுமே தங்கள் அடையாளத்தை மறுத்து தங்கள் ஒருங்கிணைந்த உணர்வைக் காட்டினர். ஆனால் ம.க.இ.க மட்டும் தான் தனது விளம்பர வெறியை முத்துக்குமாரின் சாவிலும் காட்டியது. ஏன்? ஆள் பிடிக்க இதுவாப்பா நேரம்? மேலும் இந்தப் பிரச்சனையின் ஆணிவேரான தமிழ்த் தேசிய இன விடுதலையை ஒழித்துவைத்துவிட்டு தரகு முதலாளிகளை எதிரியாக அடையாளம் காட்டியது தான் ம.க.இ.க வின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது. தமிழ் இன உணர்வோடு எழுகின்ற இளைஞர்களை அவர்களின் இன உணர்வை மழுங்கடித்துவிட்டு இல்லாத வர்க்க அரசியலை முன்னிறுத்திக் காட்டுவது ஏன்? அப்படியென்ன இந்தியப் பாசம்? இந்தியா நெடுகிலுமான நூலிலை போன்ற நக்சல்பாரிகளின் ஒட்டுறவிற்கு தமிழ்த் தேசிய உணர்வை பலிகொடுக்கும் சூழ்ச்சி என்ன? ( ம.க.இ.கவை பார்ப்பனர் எதிர்ப்பு சக்தியாகவே நாம் கணிக்கின்றோம்.) போராடும் சக்திகள் தேசிய இனச் சிக்கலைக் கையில் எடுக்காமல் வர்க்க சக்திகளை பூதக்கண்ணாடி போட்டு தேடப்போய் ஏற்பட்ட தவறுதலா?
எந்த முனையில் போராடுவது என்பது மிகவும் முக்கியம். கம்யூனிசம், மார்க்சியம் அதுகாட்டும் வர்க்கப் போர் என்று வெளிநாட்டு மாதிரிகளை எழுத்து மேசையில் விரித்து வைத்து எத்தனை முறை உத்து உத்துப் பார்த்தாலும் இந்தியாவிற்கு வர்க்கப்புரட்சியை கொண்டுவர முடியாது. ம.க.இ.க போராடுவது எல்லாம் பெரியார் வழியில், பெயர் வைப்பது என்னவோ கம்யூனிசம், பேனர்கள் படங்களில் முன்னல் காட்டுவது என்னவோ கம்யூனிச மூலவர்களை. அப்படிச் செய்தால் அது கம்யூனிசப் புரட்சியாகிவிடாது. ம.க.இ.க.விற்கு ஏற்பட்டிருக்கும் மதிப்பு பார்ப்பானை எதிர்த்ததாலும் தமிழை உயர்த்திப் பிடித்தாலுமே. அது நீண்ட நெடிய திராவிட மரபை வரலாறாக விரிக்கின்றது. அது நடத்திய வர்க்கப் போராட்டத்தால் அல்ல.

த.மு.எ.ச வின் உறுப்பினர்கள் ‘தண்ணியடித்து’த் திரியும் போக்கை விமரிசிப்பதைப் போல, பெயரியல் பேராசானையும், ரியல் எஸ்டேட் கம்பெனி விளம்பரத்தையும் தூக்கிப்பிடிக்கும் பெரியார்தாசனை விமர்சனம் செய்து புதிய ஜனநாயகத்திலோ, புதிய கலாச்சாரத்திலோ எழுதுவீர்களா? பெரியார்தாசன் எதற்கு உங்களுக்கு? பெரியாரிஸ்டுகளை கூட்டம் கூட்டவும், பெரியாரியல் வேடம் தரிக்கவும் தானே, பெரியாரியல் மரபை முன்னிறுத்தவும் தானே?. இது ஒரு உத்திதான். குற்றம் சொல்லவில்லை. உண்மையா இல்லையா சொல்லுங்கள்? பெரியார்தாசனுக்கும் ரூம் போட்டு கொடுத்து ‘தண்ணியடிக்க’ காசு கொடுத்து கூட்டங்களுக்கு அழைத்து வருகிறீர்களே உங்களுக்கும் த.மு.எ.சவிற்கும் என்ன வேறுபாடு?

பார்ப்பானை எதிர்த்து வர்க்கப் போராட்டமா நடத்தியது ம.க.இ.க? தீட்சிதனுக்கு ஆதரவாக இந்து ராம், சோ, சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா தான் வந்தாங்க, டாடாவோ, பிர்லாவோ, அல்லது தமிழ்நாட்டு முதலாளிகளோ வரவில்லை என்பது எதைக்காட்டுகிறது? ‘இந்து என்று சொல்லாதே பார்ப்பான் பின் செல்லாதே’ என்றக் கருத்தை எந்தக் கம்யூனிச சித்தாந்தத்தாலும் நியாயப்படுத்த முடியாது. இது பெரியாரியல். பிறப்பின் அடிப்படையில் சாதி என்ற ஏற்றத்தாழ்வையும் அதன் அடிப்படையில் ஒரு சமூகம் கட்டமைக்கப்பட்டிருப்பதையும் கம்யூனிச சித்தாந்தத்தால் விளக்க முடியுமா? அப்படிப்பட்ட ஆதிக்கத்தை எதிர்த்து உருவான சக்திகள் தான் ஆசீவகர்களிலிருந்து, பவுத்தம், சமணம் என்ற நீண்ட நெடிய மரபின் வழியாக திருநாவுக்கரசர், வள்ளலார் என்று தொடர்ந்து நீதிக்கட்சி, பெரியார் என அது இன்னும் இனியும் தொடரும். மார்க்சும், எங்கல்சும், லெனினும், ஸ்டாலினும், மாவொவும் இந்தியாவில் இல்லை. இது வரலாற்று எதார்த்தம். குறைந்த பட்சம் புத்தர் படம், அம்பேத்கார் படம், பெரியாரை பிடிக்கவில்லையென் றால் மகாவீரர் படமாவது வையுங்கள். அந்த மரபில் தான் இந்தப் போர் என்று மக்களுக்குத் தெரியும் உங்களுக்கு நீங்களே உணர்ந்துகொள்ள. இன்னும் இருக்கிறது, உணர்ச்சிவசப்படாமல் படிங்கள். அது ஒரு சமூகத் தன்மை.
உற்பத்தி உறவுகளின் கட்டுமானத்தால் இயங்கும் எல்லா சமூகத்திலும் கருத்தியல் தளங்கள் தாக்குரவை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அய்ரோப்பாவிலும் கூட. அது இந்தியாவில் மிகவும் கடுமையானதொரு வளர்ச்சியைப் பெற்றுவிட்டதால், அதன் செயல்பாடு கடவுள் போன்ற மூடநம்பிக்கைகளின் முதலீட்டில், ஆரிய திராவிட எதிர்நிலை இனப் போரின் வெளிப்பாடாக, ஒரு பண்பாட்டு படையெடுப்பைக் கட்டவிழ்த்து விட்டது. எனவே தான் பெரியார் பார்ப்பானைக் குறிவைத்தார்; கடவுள், மதம், மூடநம்பிக்கைகளை தகர்த்தார்; வரலாற்று இனப்பகைவனை எதிரியாக முன் நிறுத்தினார்; பார்ப்பன சாதி ஆதிக்க வெறி அது தன் வரலாற்றில் கண்டிராத மாபெரும் நெருக்கடியை தமிழகத்தில் கண்டது. அதன் தொடர்ச்சியாக பார்ப்பானைக் குறிவைக்கும் எந்தப் போராட்டமும் பெரியாரியல் போராட்டமே. அதை கம்யூனிசத்தின் பெயரில் செய்வது என்பது சூரியனை கை வைத்து மறைக்கச் செய்யும் சூழ்ச்சியே. பார்ப்பானை எதிர்ப்பது என்பதே பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை எதிர்ப்பது. அதன் மூலவர் பெரியாரே. அதற்கு சம்பந்தமே இல்லாத மார்க்சும், எங்கெல்சும், லெனினும், ஸ்டாலினும், மாவோவும் உங்கள் மேடைகளில் அலங்கரிக்கிறார்கள், பெரியாரை ஏன் மறைக்கிறீர்கள். இது தான் கம்யூனிசமா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கும் மரபையும் சமூகக் காரணிகளையும் மறைத்து வைப்பது தான் கம்யூனிசமா? இதைத்தான் கம்யூனிச மூலவர்கள் உங்களுக்குச் சொல்லித்தந்தார்களா?

பார்ப்பானை எதிர்ப்பது என்பதும், சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பதும் திராவிடர்களுக்கு எதிரான ஆரிய இன ஆதிக்கப்பண்பாட்டை எதிர்ப்பதே. எனவே ம.க.இ.கவும் ஒரு திரரவிட இயக்கமே. அதற்கான மரபு திராவிட இயக்கத்தில்தான் இருக்கின்றது. புதிதாக யாரும் அதைக் கண்டுபிடித்து விட்டதாக இருமாப்பு கொள்ள வேண்டியதில்லை. வரலாறு முன்னின்று உருத்துகின்றது. பெரியாரின் போராட்ட மரபிற்கு துரோகம் செய்யாதீர்கள்; இருட்டடிப்பு செய்யாதீர்கள். தமிழகத்தில் வெளிப்படையாக எழுந்த போராட்டம் இன எழுச்சி, பண்பாட்டு மீட்சிப் போராட்டம். ஏனென்றால், அது வரலாறு தொட்டு கூர்மைபட்ட போராட்டம். அதை யார் கையில் எடுத்தாலும் அது திராவிட இயக்க மரபு இல்லாமல் செய்ய முடியாது. இனியும் செய்யமுடியாது. அதை யாரும் மறுக்க முடியாது.
வர்க்கப் போராட்டத்தில் ம.க.இ.க என்ன சாதித்தது? கங்கைகொண்டானில் தொடர்ப் போராட்டம் என்று என்ன வடிவம் கொடுத்திருக்கிறீர்கள். கங்கைகொண்டானில் நந்திகிராமத்தை ஏன் நீங்கள் உருவாக்க முடியவில்லை. இருங்காட்டுக் கோட்டையில் ஏன் நந்திகிராமம் உருவாகவில்லை? அதற்கான மரபும் சமூகக் காரணிகளும் தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை. அதேபோல நந்திகிராமில் கம்யூனிசத்திற்கு எதிராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி கூட கம்யூனிசஅடித்தளத்தில் இயல்பாக உருவான எழுச்சியை பயன்படுத்தி டாடா நானோவை விரட்டினார். மம்தாவின் போராட்டம் அவரது தனிப்பட்ட வெற்றியல்ல. அங்கே ஏற்கனவே கனன்றுகொண்டிருந்த நக்சல்பாரிப் புரட்சியின் தொடர்ச்சி தான் அவ்வெற்றி.
அப்படிப்பட்ட வர்க்கப்போராட்ட மரபை தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் உங்களைப் போன்ற புரட்சிகர சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்து செய்யவேண்டும். ஆனால் பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பை கையில் எடுத்து நிறைய செய்ய முடிகின்றது என்றால் அதற்கான மரபையும், சமூகக் காரணிகளையும் திராவிட இயக்கங்கள் வலுவாக ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு கருணாநிதி இல்லாமல் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ற தோழர் மருதையனின் கேள்விக்கு பதில் இங்கே இருக்கின்றது. எனவே அவ்வகையில் ம.க.இ.க ஒரு திராவிட இயக்கமே. அப்படிப்பட்ட ஒரு பரிமாணம் தான் உங்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. திராவிட இயக்கத்தின் மரபையும் அது ஏற்படுத்தியிருக்கும் சமூகக் காரணிகளையும் யார் நினைத்தாலும் உதறிவிட முடியாது; அதுவேயில்லாமல் புதிதாக செய்யும் சமூக எதார்த்தமும் இப்பொழுது இல்லை; எனவே அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்; வரலாற்றிலிருந்து மறைக்க முயற்சி செய்யமுடியாது.

ஒரு புரட்சி அல்லது போராட்டம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். கம்யூனிச ஆதாரத்தால் மட்டுமே ஒரு புரட்சியை செய்ய முடியும் இல்லையென்றால் முடியாது என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் இயல்பிற்குத் தக்கவாறான பிரச்சனைகளை முன்னிறுத்தி பாதிக்கப்பட்ட சக்திகள் அமைப்பு ரீதியாக போராட வேண்டும். அதற்கு கம்யூனிசம் கூடத் தேவையில்லை.

எடுத்துக்காட்டாக கியூபப் புரட்சி. கியூபப் புரட்சி ஒரு கம்யூனிசப் புரட்சியல்ல. அங்கேயிருந்த கம்யூனிஸ்டுகளின் கபடம் பிடிக்காமல் ஒதுங்கியவர்தான் பிடல் காஸ்ட்ரோ. ஆனால் அதற்குப் பின் மார்க்சின் கொள்கைகளை ஏற்று இடதுசாரி ஆட்சிமுறையைக் கொண்டு வந்தார். அதுவும் கூட இன்றளவிலும் ஒருகட்சி ஜனநாயகம் தான். இன்னொரு சந்தேகம், ஒரு கட்சி மட்டும்தான் என்றால் அது எப்படி ஜனநாயகம் ஆக முடியும்? பெனிவேலண்ட் டிக்டேட்டர்சிப் என்றும் அதனைச் சொல்லலாம். ஸ்டாலினைப் போல. ஸ்டாலினும் ஒரு சர்வாதிகாரிதான். (ஏன் ஸ்டாலினுக்குப் பின் முதலாளி வர்க்கம் கையோங்கியது என்று உணர்ச்சிவசப்படாமல் யோசியுங்கள், அப்போது புரியும், ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்யும் வெறும் சர்வாதிகாரியாக இருந்து இறந்துவிட்டார் என்று. கம்யூனிசத்திற்குத் தேவையான கட்டமைப்பை பெரிதாக செய்துவிடவில்லை.) ஆனால் அடித்தட்டு மக்களுக்கான சர்வாதிகாரி. அதாவது பாட்டாளி மக்கள் சர்வாதிகாரி.

கம்யூனிசம் என்பது இதுநாள்வரை உலகில் எங்குமே இருந்ததேயில்லை Primitive Communism தவிர. கம்யூனிசம் என்பது மார்க்சு சொல்வதைப் போல ஒரு அரசில்லா பொது உடமைச்சமூகத்தின் உயரிய மக்கள் பண்பாடு (அது ஒன்றைத்தான் Communism என்று சொல்லமுடியும்). அதை நோக்கி சமூகம் இயங்கும் என்பது மார்க்சின் கணிப்பு. மேலும் அதற்கான போராட்டத்தை வர்க்க சக்திகள் உரிய நேரத்தில் கையில் எடுக்காவிட்டால் சமூகம் மீண்டும் காட்டுமிராண்டித் தனமாக மாறிவிடும் என்றும் சொல்கிறார் மார்க்சு. ஒருவேளை அந்தப் புரட்சிக்கான தருணம் தப்பிவிட்டதா என்று கூட அய்யப்படவேண்டியதாக இருக்கின்றது. அவர்கண்ட பாட்டாளி வர்க்கப் போராட்டம் அய்ரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ நடைபெறவில்லை. இன்னும் நடைபெறவில்லை. அமெரிக்காவின் வர்த்தக நிறுவனங்களின் ஊழல் சந்தி சிரித்து மக்கள் தெருவிற்கு வந்த பின்னும். ஏன்? ஏன் மக்கள் வர்க்கமாக ஒன்றிணைய முடியவில்லை?

முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமாக ஏகாதிபத்தியம் வந்துவிட்டது என்று லெனின் சொன்னார். ஏகாதிபத்தியம் என்ற கூறு மார்க்சின் ஆய்வில் இருந்தாலும் அப்படிப்பட்ட சமூக முறையை மார்க்சு தனியாகப் பிரித்துக் கணிக்கத் தவறிவிட்டாரா? அல்லது அப்படிப்பட்ட தனி சமூக முறை இல்லையென்பதாலா? எனில் முதலாளித்துவத்திற்குப் பின் ஏகாதிபத்திய உச்சம், அதற்குப் பின்? யார் கணிப்பது இந்தச் சமூக இயக்கத்தை? அது எல்லா சமூகத்திற்கு ஒரே மாதிரியாகவும் இருக்காது. மார்க்சியம் உண்மையிலேயே நம்மை சரியாக வழிநடத்துகின்றதா?

சொல்லுங்கள், மார்க்சிய லெனினிய மாவோயிச சக்திகளே, இந்தச் சமூகத்தின் இன்றைய கட்டம் என்ன, அடுத்த கட்டம் என்ன? மார்க்சிய மூலவர்களை உய்த்துணர்ந்து கணித்துச் சொல்லுங்கள். மிஞ்சிப்போனால் என்ன சொல்வீர்கள். அடுத்த கட்டம் ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான போர் என்று சொல்வீர்கள். சரி அதற்குப்பின்னாவது வர்க்க சக்திகள் புரட்சியை கையில் எடுக்குமா? எடுத்தால் தான் புரட்சி. மார்க்சியம் என்பதே மாற்றுவதற்கான சித்தாந்தம் அல்லவா? ஆனால் ஏகாதிபத்தியங்கள் சமரசம் செய்துகொள்கின்றனவே. புரட்சிக்கான தருணத்தை வர்க்க சக்திகள் தவறவிடும் ஒவ்வொரு முறையும் மார்க்சியம் அழுகின்றது. மார்க்சின் கோட்பாட்டின் படி வரவிருக்கும் சமூகத்தின் உற்பத்தி சக்திகள் நிகழ்கால சமூகத்தில் தோன்றி வளர வேண்டும் அல்லவா? முதலாளித்துவத்திற்கு முன்னிருந்த எல்லா சமூகத்திலும் ஆளும் வர்க்கங்கள் சண்டைபோட்டுக்கொண்டு அடுத்தகட்ட ஆளும் வர்க்கம் கோலோச்சுகிறது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் மட்டும் தான் ஆளும் வர்க்கத்தை எதிர்க்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு வெல்லும் திறன் இருக்கிறது என்று கூறுகிறார். ஆக பாட்டாளி வர்க்கத்தினுடைய உற்பத்தி சக்தி என்ன? பாட்டாளி வர்க்கமே ஒரு உற்பத்தி சக்திதான். அது சர்வாதிகாரம் செய்து முதலாளித்துவ சக்திகளை எல்லாம் ஒழித்து கம்யூனிசப் பண்பாட்டை வளர்க்க வேண்டும். அதற்கு உலகம் தழுவிய கம்யூனிசக் கூட்டணி தேவைப்படுகிறது. சோவியத் ரசியா காலத்தில் செஞ்சீனம் இருந்தும் கூட்டணி சக்தியாக வளராமல், விரிசல் ஏற்பட்டு முரண்பட்டிவிட்டார்கள், பெரிய ஏமாற்றமே.

மாவோ கண்ட செஞ்சீனம் இப்பொழுது எந்த வழியில் செல்கின்றது? ஏன் முதல் கட்ட புரட்சியாளருக்குப் பின் வருவோர் எல்லாம் ஏமாற்றிவிடுகிறார்கள்? அது எதன் குறை? தனி மனித குறையாக இருக்க முடியாது. சித்தாந்ததில் என்ன பிழையிருக்கின்றது? தேடவேண்டிய அவசியம் இருக்கின்றது?

இன்றைய சீனம், அண்டை நாட்டில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டும் காணமல் விட்டுவிட்டு, இலங்கைப் பேரினவாதத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தில் வக்காளத்து வாங்குகின்றதே? இலங்கையின் இனப்படுகொலைக்கு மூடுதிரை போடுகிறதே. இதன் பொருள் என்ன? அமெரிக்கக் கொடியை எரிப்பாய் போற்றி ம.க.இ.கவே சீனத்தின் கொடியை தீயிட்டுக் கொளுத்தத் தயாரா? இதோ தீக்குச்சி.

சோவியத் ரசியாவே, ஸ்டாலின் காலத்தில், உலகப் போரில் தனது கூட்டணியான இங்கிலாந்திற்கு எதிராக தனது உதவியை நாடிய சுபாஷ் சந்திர போசுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உதவ முடியாது என்று கைவிரித்து விட்டது. அது ஏனோ? அப்படி உதவி பண்ணியிருந்தாலாவது சுபாசின் கீழான ஒரு கம்யூனிச இந்தியாவை நாம் அப்போதே கண்டிருப்போம். கண்டிருப்போமா, இல்லையா? அல்லது அதற்கு வாய்ப்பு இருந்ததா இல்லையா? ஆசியாவே கம்யூனிச ஆசியாவாக ஆகியிருக்கும். இது ஸ்டாலினின் தொலை நோக்கு பார்வையற்ற செயலா? உணர்ச்சிவசப்படாமல் யோசியுங்கள். நமக்கு யார்மீது தனிநபர் வழிபாடு வேண்டியதில்லை. அது தான் கம்யூனிசம். இட்லரின் ஜெர்மனியை எதிர்த்துக் கொண்டே ஆசியாவில் காலணியாதிக்கத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான சக்திகளை ஊக்குவிப்பதில் பெரிய சிரமம் இருந்திருக்க முடியாது.

ஸ்டாலினின் பிழைகள் என்று ஒரு சமூக ஆய்வு இந்தவகையில் மார்க்சியத்திற்குத் தேவைப்படுகிறது என்பது என்னுடைய அபிப்பிராயம். அது மாவோவிற்கும் பொருந்தும். கம்யூனிச சக்திகளே தீவிரமாக உண்மையாக சுயபரிசீலனை செய்யுங்கள். உங்கள் சமூகத்தின் தன்மையை சரியான கோணத்தில் ஆய்வு செய்யுங்கள். கம்யூனிசம் உதவியாக இருக்கலாமேயொழிய கடிவாளமாக இருக்கக் கூடாது. இந்த உலகத்தில் ‘ஒரே ஒரு சரி’ மட்டும் தான் இருக்க முடியும் என்று முட்டுச் சந்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஆனால் நாம் பின் நவீனத்துவ வாதியல்லோம். அறிவியலில் மட்டும் தான் ‘ஒரே ஒரு சரி’ என்று கூற முடியும். சமூகம், பண்பாடு, ஜனநாயகம் போன்ற தளங்களில் அப்படி எதுவும் இல்லை. சமூகவியலையும் ஓர் அறிவியல் என்று சொன்னாலும் ஒரு அறிவியல் புலமாக அது இல்லையே.

ஒரு சமூகத்தின் தன்னியல்பிலான சீற்றம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு அதன் வழியாக மக்களை ஒன்றுதிரட்டி புரட்சி வென்று, அதற்கடுத்த கட்டமாகத்தான் இடதுசாரித் தன்மையை அதனுள் புகுத்த முடியும், வேண்டும். இல்லையென்றால், இயல்பற்ற வழியில் ஒன்று திரட்ட முடியாமல், ஆரம்ப கட்டத்திலேயே கம்யூனிசம் தோற்றுப் போச்சே என்ற பழிச்சொல்லை கம்யூனிசத்திற்கு வாங்கிக்கொடுக்காதீர்கள். எதையுமே புரிஞ்சுக்காம போராடாதீங்கப்பா.

மற்றொன்று, திராவிட இயக்க மரபில் நின்று போராடிக்கொண்டு திராவிட இயக்க சமூகக் காரணிகளைப் பயன்படுத்திக்கொண்டு வர்க்க வேடம் போடவேண்டாம். வரலாற்றைத் திரிக்க வேண்டாம்.

தமிழகத்தில் புரட்சிகர சக்தியாக முன்வர வேண்டுமென்றால், பெரியாரைக் கையில் எடுக்காமல் முடியாது. பெரியாரியக் களத்தில் நின்றுகொண்டு போராடி அதற்குக் கம்யூனிச முகமூடி போட்டுக்கொண்டால் இங்கே கம்யூனிசம் தான் வெல்கிறது என்று முன்னிறுத்தலாம். அப்படி கம்யூனிசத்தை முன்னிறுத்திவிட்டால், பெரியாரியலும் திராவிட இயக்க மரபையும் குழிதோண்டிப் புதைத்துவிடலாம். இடையிடையே பெரியார் தவிர்த்த திராவிட இயக்கத்தை விமர்சனம் செய்து ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையும் கிரகணத்தால் மூடிவிடலாம். பிறகு இங்கே பெரியாரும் இல்லை, திராவிட இயக்கமும் இல்லை, கம்யூனிசம் மட்டும் தான் என்று வரலாற்றை திசைதிருப்பிவிடலாம். என்றெல்லாம் இயல்பாகவே அயோக்கியத் தனமாக பார்ப்பான் ஒருத்தன் தான் சிந்திப்பான். ம.க.இ.க வில் பார்ப்பான் யாரும் இல்லையே! எச்சரிக்கை. கிரகணம் கொஞ்ச நேரம் தான்.சூரியன் தான் நிரந்தரம்.

பெரியாரின் தத்துவத்தை வென்றுவிட்டு கம்யூனிச சித்தாந்தத்தை முன்னிறுத்துங்கள். ஏற்றுக்கொள்கிறோம். பெரியாரிய களத்தில் கம்யூனிச வேடம் போடுவதால் பெரியாரியலை குழிதள்ள முடியாது. கம்யூனிசமே பெரியாரியல் பக்கம் தான் நிற்கும். வேண்டுமென்றால் என் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அக்ரகாரத்தில் போய் ஆள்பிடித்துக்கொண்டு, கூட்டம் திரட்டிக்கொண்டு வாருங்கள் பார்ப்பானையும், சமஸ்கிருதத்தையும் எதிர்த்து வீழ்த்த. நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் கம்யூனிசத்தை. செய்ய முடியுமா?

இதுவே எனது புரிதல். எதையும் சந்தேகிப்பாய்; சிந்திப்பாய்; செயல்படுவாய்.