Wednesday, April 1, 2009

ம.க.இ.க வின் பெரியாரிய கிரகணம்

ம.க.இ.க இன்று நடத்தி வருகிற பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்கள், அது தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் ஏறுவதானாலும் சரி, தீட்சிதர்களை விரட்டும் போராட்டமானாலும் சரி, இவையெல்லாம் பெரியாரியல் போராட்டங்களே. இப்போராட்டங்களுக்காக அணிதிரட்டப்பட்ட சக்திகளும் வர்க்கக் கூட்டங்கள் அல்ல. (திமுக அரசும் போலீஸ் கூட்டமும் எந்த வர்க்கத்தைச் சார்ந்தவை?) தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் ஏற்றப்பட்ட விதத்திற்கு தி.மு.க அரசின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதை தோழர் மருதையன் பாணியில் சொல்வதானால் தோளில் ஏற்றிக்கொண்டு ஓடுவது என்பதாகச் சொல்லலாம். தோளில் ஏற்றுக்கொண்டு ஓடுவது சரி, தோளில் ஏற வேண்டுமே! ஜெயலலிதா அரசாக இருந்திருந்தால்! அந்தச் சந்தேகம் தோழர் மருதையனுக்கே இருந்திருக்கிறது. அதனை ம.க.இ.க வின் தில்லை வெற்றி (வெற்றி மாநாடு-1) மாநாட்டில் தொட்டுவிட்டுத் தொடராமல் விட்டுவிட்டார். ஏன்? அந்த சமூக எதார்த்ததை விளக்கமாக ஆராய்ந்து வெளியிடுங்கள்.

பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகனின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் தமிழகத்தில் தொடங்கப்பட்ட பார்ப்பனரல்லாதோர் நன்மைக்காக தொடங்கப்பட்ட தென்இந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி போன்ற திராவிடர் இயக்கங்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய - வரலாற்று ரீதியான சமூக சீர்திருத்தத்தின் அடித்தளம் முக்கியமானது. இந்நேரம் வடநாடாக இருந்திருந்தால் சூலாயுதத்தோடு அகோரிகளும், அம்மணக்குண்டி சாமியார்களும், சங்கப் பரிவாரமும் ரவுண்டுகட்டியிருந்திருப்பார்கள். மேலும் நீதிக் கட்சியின் ஆட்சியிலிருந்தே தொடர்ந்து பல அரசுகளால் - ஆங்கிலேய நீதிபதிகளால் தீட்சிதர்களின் தில்லையின் மீதான உரிமையை கேள்விக்கு உட்படுத்திப் பெறப்பட்ட நீதிமன்ற ஆணைகள் முக்கியமானவை. அதற்கும் முன், அனைத்து கோவில்களையும் இந்து அறநிலையத்துறையின் வாயிலாக அரசு ஏற்றதன் வரலாற்றை நீதிக்கட்சியினர் தொடங்குகின்றனர். சமீபத்தில் பெறப்பட்ட நீதிமன்ற ஆணைக்கு அடித்தளமாக இருந்ததும் அதற்கு முன் பெறப்பட்ட நீதிமன்ற ஆணைகளே. இதில் ம.க.இ.கவின் பணி இந்தப் பிரச்சனையை தாங்கள் முன் நின்று நடத்தியது. ஆனால் அவர்கள் அதற்காக தேடிக்கொள்ளும் விளம்பரம் மேற்சொன்ன எல்லா சமூகக் காரணிகளுக்கும் செல்ல வேண்டிய எல்லா பாராட்டுகளையும் அவை எவற்றிற்கும் செல்லவிடாமல் உறிஞ்சிக்கொண்டதே.

சமீபத்திய தில்லை வெற்றி மாநாட்டில் (வெற்றி மாநாடு-2), சம்பந்தமே இல்லாத கம்யூனிச மூலவர்கள் எல்லாம் வரிசையாக இருக்கப் பெயருக்குக் கூட ஒரு பெரியார் படம் இல்லையே. ஏன்? மாலை போடுவது எல்லாம் அப்பறம் இருக்கட்டும். (வேற வழியில்லை. இங்கே மாலை போடுறதுக்குத் தான் பெயரளவிற்குக் கூட மார்க்சு சிலையோ, லெனின் சிலையோ, ஸ்டாலின் சிலையோ, மாவோவின் சிலையோ இல்லையே. அது தான் சமூக எதார்த்தம்) கம்யூனிச மூலவர்களைச் சொல்லிக் கூட்டம் கூட்டவில்லையே. பெரியாரையும், தமிழையும் சொல்லிச் சொல்லித் தானே கூட்டினீர்கள். ம.க.இ.க எடுத்துச் செய்யும் வேலைகள், தில்லை போராட்டம் போன்ற பல போராட்டங்கள், எல்லாம் பெரியார் காட்டிய வழியில், பெரியார் அமைத்த களத்தில். ஆனால் சூட்டுவது எல்லாம் கம்யூனிசத்தின் பெயரை. இது தான் இருட்டடிப்பு என்பதா? அமுக்கத்தின் சூழ்ச்சி அல்லது Conspiracy of Silence. நீங்கள் திரட்டிய சக்திகள் எல்லாம் வர்க்கக் கூட்டமாக இருந்தாலாவது கம்யூனிசத்தின் பெயரைச் சூட்டலாம். ஆனால் அதுவுமில்லையே. தமிழ் மொழி மற்றும் இனம், அதற்கு எதிரான பார்ப்பன பாசிசத்தை எதிர்க்கும் சக்திகளின் பங்களிப்பு தானே பெரிதும் ஒத்துழைத்தன. இல்லையென்று நிரூபிக்க முடியுமா?

ஈழப் பிரச்சனையில், இன எழுச்சியில் கொந்தளிக்கும் தமிழர் கூட்டத்திற்கு, தேசிய இனங்களை ஒடுக்கும் பார்ப்பன பாசிச இந்தியாவை முன்னிலைப் படுத்தி எதிர்க்காமல் தரகு முதலாளிக் கூட்டத்தை முன்னிலைப்படுத்தும் வர்க்கப் பாசம் கொண்ட இந்தியாவை எதிரியாக முன்னிலைப் படுத்துவது ஏன்? நாமும் தரகு முதலாளிக் கூட்டத்தை எதிர்க்கிறோம். ஆனால் ஈழப் பிரச்சனையில்? தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் 2000-யில் வந்தது. அதற்கும் முன் இந்திய சதி என்பது 25 ஆண்டுகள் பழமையானது. அதில் வர்க்கப்பாசம் இல்லையே. பார்ப்பனப் பாசிசம் தானே ஈழத்தைக் கருவறுத்தது. பார்ப்பன அதிகாரிகள் அதில் முக்கியமானவர்கள். இன்றளவில் கூட இந்தியத் தரகு முதலாளிக் கும்பல் இலங்கையில் இல்லாமல் இருந்தாலும் இது தானே நிலை. எனவே அடிப்படையாக மூல காரணமாக இருப்பது தேசிய இனங்களை ஒடுக்கும் பார்ப்பன பாசிச இந்தியா. ஆக அதுதான் பிரதான அரசியல். அது ஏன் முன்னிலைப்படுத்தப்படவில்லை?

ம.க.இ.க வின் விளம்பரத் தாகம் பெப்சி, கோக்கையும் மிஞ்சிவிட்டது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் எல்லா அமைப்புகளுமே தங்கள் அடையாளத்தை மறுத்து தங்கள் ஒருங்கிணைந்த உணர்வைக் காட்டினர். ஆனால் ம.க.இ.க மட்டும் தான் தனது விளம்பர வெறியை முத்துக்குமாரின் சாவிலும் காட்டியது. ஏன்? ஆள் பிடிக்க இதுவாப்பா நேரம்? மேலும் இந்தப் பிரச்சனையின் ஆணிவேரான தமிழ்த் தேசிய இன விடுதலையை ஒழித்துவைத்துவிட்டு தரகு முதலாளிகளை எதிரியாக அடையாளம் காட்டியது தான் ம.க.இ.க வின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது. தமிழ் இன உணர்வோடு எழுகின்ற இளைஞர்களை அவர்களின் இன உணர்வை மழுங்கடித்துவிட்டு இல்லாத வர்க்க அரசியலை முன்னிறுத்திக் காட்டுவது ஏன்? அப்படியென்ன இந்தியப் பாசம்? இந்தியா நெடுகிலுமான நூலிலை போன்ற நக்சல்பாரிகளின் ஒட்டுறவிற்கு தமிழ்த் தேசிய உணர்வை பலிகொடுக்கும் சூழ்ச்சி என்ன? ( ம.க.இ.கவை பார்ப்பனர் எதிர்ப்பு சக்தியாகவே நாம் கணிக்கின்றோம்.) போராடும் சக்திகள் தேசிய இனச் சிக்கலைக் கையில் எடுக்காமல் வர்க்க சக்திகளை பூதக்கண்ணாடி போட்டு தேடப்போய் ஏற்பட்ட தவறுதலா?
எந்த முனையில் போராடுவது என்பது மிகவும் முக்கியம். கம்யூனிசம், மார்க்சியம் அதுகாட்டும் வர்க்கப் போர் என்று வெளிநாட்டு மாதிரிகளை எழுத்து மேசையில் விரித்து வைத்து எத்தனை முறை உத்து உத்துப் பார்த்தாலும் இந்தியாவிற்கு வர்க்கப்புரட்சியை கொண்டுவர முடியாது. ம.க.இ.க போராடுவது எல்லாம் பெரியார் வழியில், பெயர் வைப்பது என்னவோ கம்யூனிசம், பேனர்கள் படங்களில் முன்னல் காட்டுவது என்னவோ கம்யூனிச மூலவர்களை. அப்படிச் செய்தால் அது கம்யூனிசப் புரட்சியாகிவிடாது. ம.க.இ.க.விற்கு ஏற்பட்டிருக்கும் மதிப்பு பார்ப்பானை எதிர்த்ததாலும் தமிழை உயர்த்திப் பிடித்தாலுமே. அது நீண்ட நெடிய திராவிட மரபை வரலாறாக விரிக்கின்றது. அது நடத்திய வர்க்கப் போராட்டத்தால் அல்ல.

த.மு.எ.ச வின் உறுப்பினர்கள் ‘தண்ணியடித்து’த் திரியும் போக்கை விமரிசிப்பதைப் போல, பெயரியல் பேராசானையும், ரியல் எஸ்டேட் கம்பெனி விளம்பரத்தையும் தூக்கிப்பிடிக்கும் பெரியார்தாசனை விமர்சனம் செய்து புதிய ஜனநாயகத்திலோ, புதிய கலாச்சாரத்திலோ எழுதுவீர்களா? பெரியார்தாசன் எதற்கு உங்களுக்கு? பெரியாரிஸ்டுகளை கூட்டம் கூட்டவும், பெரியாரியல் வேடம் தரிக்கவும் தானே, பெரியாரியல் மரபை முன்னிறுத்தவும் தானே?. இது ஒரு உத்திதான். குற்றம் சொல்லவில்லை. உண்மையா இல்லையா சொல்லுங்கள்? பெரியார்தாசனுக்கும் ரூம் போட்டு கொடுத்து ‘தண்ணியடிக்க’ காசு கொடுத்து கூட்டங்களுக்கு அழைத்து வருகிறீர்களே உங்களுக்கும் த.மு.எ.சவிற்கும் என்ன வேறுபாடு?

பார்ப்பானை எதிர்த்து வர்க்கப் போராட்டமா நடத்தியது ம.க.இ.க? தீட்சிதனுக்கு ஆதரவாக இந்து ராம், சோ, சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா தான் வந்தாங்க, டாடாவோ, பிர்லாவோ, அல்லது தமிழ்நாட்டு முதலாளிகளோ வரவில்லை என்பது எதைக்காட்டுகிறது? ‘இந்து என்று சொல்லாதே பார்ப்பான் பின் செல்லாதே’ என்றக் கருத்தை எந்தக் கம்யூனிச சித்தாந்தத்தாலும் நியாயப்படுத்த முடியாது. இது பெரியாரியல். பிறப்பின் அடிப்படையில் சாதி என்ற ஏற்றத்தாழ்வையும் அதன் அடிப்படையில் ஒரு சமூகம் கட்டமைக்கப்பட்டிருப்பதையும் கம்யூனிச சித்தாந்தத்தால் விளக்க முடியுமா? அப்படிப்பட்ட ஆதிக்கத்தை எதிர்த்து உருவான சக்திகள் தான் ஆசீவகர்களிலிருந்து, பவுத்தம், சமணம் என்ற நீண்ட நெடிய மரபின் வழியாக திருநாவுக்கரசர், வள்ளலார் என்று தொடர்ந்து நீதிக்கட்சி, பெரியார் என அது இன்னும் இனியும் தொடரும். மார்க்சும், எங்கல்சும், லெனினும், ஸ்டாலினும், மாவொவும் இந்தியாவில் இல்லை. இது வரலாற்று எதார்த்தம். குறைந்த பட்சம் புத்தர் படம், அம்பேத்கார் படம், பெரியாரை பிடிக்கவில்லையென் றால் மகாவீரர் படமாவது வையுங்கள். அந்த மரபில் தான் இந்தப் போர் என்று மக்களுக்குத் தெரியும் உங்களுக்கு நீங்களே உணர்ந்துகொள்ள. இன்னும் இருக்கிறது, உணர்ச்சிவசப்படாமல் படிங்கள். அது ஒரு சமூகத் தன்மை.
உற்பத்தி உறவுகளின் கட்டுமானத்தால் இயங்கும் எல்லா சமூகத்திலும் கருத்தியல் தளங்கள் தாக்குரவை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அய்ரோப்பாவிலும் கூட. அது இந்தியாவில் மிகவும் கடுமையானதொரு வளர்ச்சியைப் பெற்றுவிட்டதால், அதன் செயல்பாடு கடவுள் போன்ற மூடநம்பிக்கைகளின் முதலீட்டில், ஆரிய திராவிட எதிர்நிலை இனப் போரின் வெளிப்பாடாக, ஒரு பண்பாட்டு படையெடுப்பைக் கட்டவிழ்த்து விட்டது. எனவே தான் பெரியார் பார்ப்பானைக் குறிவைத்தார்; கடவுள், மதம், மூடநம்பிக்கைகளை தகர்த்தார்; வரலாற்று இனப்பகைவனை எதிரியாக முன் நிறுத்தினார்; பார்ப்பன சாதி ஆதிக்க வெறி அது தன் வரலாற்றில் கண்டிராத மாபெரும் நெருக்கடியை தமிழகத்தில் கண்டது. அதன் தொடர்ச்சியாக பார்ப்பானைக் குறிவைக்கும் எந்தப் போராட்டமும் பெரியாரியல் போராட்டமே. அதை கம்யூனிசத்தின் பெயரில் செய்வது என்பது சூரியனை கை வைத்து மறைக்கச் செய்யும் சூழ்ச்சியே. பார்ப்பானை எதிர்ப்பது என்பதே பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை எதிர்ப்பது. அதன் மூலவர் பெரியாரே. அதற்கு சம்பந்தமே இல்லாத மார்க்சும், எங்கெல்சும், லெனினும், ஸ்டாலினும், மாவோவும் உங்கள் மேடைகளில் அலங்கரிக்கிறார்கள், பெரியாரை ஏன் மறைக்கிறீர்கள். இது தான் கம்யூனிசமா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கும் மரபையும் சமூகக் காரணிகளையும் மறைத்து வைப்பது தான் கம்யூனிசமா? இதைத்தான் கம்யூனிச மூலவர்கள் உங்களுக்குச் சொல்லித்தந்தார்களா?

பார்ப்பானை எதிர்ப்பது என்பதும், சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பதும் திராவிடர்களுக்கு எதிரான ஆரிய இன ஆதிக்கப்பண்பாட்டை எதிர்ப்பதே. எனவே ம.க.இ.கவும் ஒரு திரரவிட இயக்கமே. அதற்கான மரபு திராவிட இயக்கத்தில்தான் இருக்கின்றது. புதிதாக யாரும் அதைக் கண்டுபிடித்து விட்டதாக இருமாப்பு கொள்ள வேண்டியதில்லை. வரலாறு முன்னின்று உருத்துகின்றது. பெரியாரின் போராட்ட மரபிற்கு துரோகம் செய்யாதீர்கள்; இருட்டடிப்பு செய்யாதீர்கள். தமிழகத்தில் வெளிப்படையாக எழுந்த போராட்டம் இன எழுச்சி, பண்பாட்டு மீட்சிப் போராட்டம். ஏனென்றால், அது வரலாறு தொட்டு கூர்மைபட்ட போராட்டம். அதை யார் கையில் எடுத்தாலும் அது திராவிட இயக்க மரபு இல்லாமல் செய்ய முடியாது. இனியும் செய்யமுடியாது. அதை யாரும் மறுக்க முடியாது.
வர்க்கப் போராட்டத்தில் ம.க.இ.க என்ன சாதித்தது? கங்கைகொண்டானில் தொடர்ப் போராட்டம் என்று என்ன வடிவம் கொடுத்திருக்கிறீர்கள். கங்கைகொண்டானில் நந்திகிராமத்தை ஏன் நீங்கள் உருவாக்க முடியவில்லை. இருங்காட்டுக் கோட்டையில் ஏன் நந்திகிராமம் உருவாகவில்லை? அதற்கான மரபும் சமூகக் காரணிகளும் தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை. அதேபோல நந்திகிராமில் கம்யூனிசத்திற்கு எதிராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி கூட கம்யூனிசஅடித்தளத்தில் இயல்பாக உருவான எழுச்சியை பயன்படுத்தி டாடா நானோவை விரட்டினார். மம்தாவின் போராட்டம் அவரது தனிப்பட்ட வெற்றியல்ல. அங்கே ஏற்கனவே கனன்றுகொண்டிருந்த நக்சல்பாரிப் புரட்சியின் தொடர்ச்சி தான் அவ்வெற்றி.
அப்படிப்பட்ட வர்க்கப்போராட்ட மரபை தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் உங்களைப் போன்ற புரட்சிகர சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்து செய்யவேண்டும். ஆனால் பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பை கையில் எடுத்து நிறைய செய்ய முடிகின்றது என்றால் அதற்கான மரபையும், சமூகக் காரணிகளையும் திராவிட இயக்கங்கள் வலுவாக ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு கருணாநிதி இல்லாமல் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ற தோழர் மருதையனின் கேள்விக்கு பதில் இங்கே இருக்கின்றது. எனவே அவ்வகையில் ம.க.இ.க ஒரு திராவிட இயக்கமே. அப்படிப்பட்ட ஒரு பரிமாணம் தான் உங்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. திராவிட இயக்கத்தின் மரபையும் அது ஏற்படுத்தியிருக்கும் சமூகக் காரணிகளையும் யார் நினைத்தாலும் உதறிவிட முடியாது; அதுவேயில்லாமல் புதிதாக செய்யும் சமூக எதார்த்தமும் இப்பொழுது இல்லை; எனவே அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்; வரலாற்றிலிருந்து மறைக்க முயற்சி செய்யமுடியாது.

ஒரு புரட்சி அல்லது போராட்டம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். கம்யூனிச ஆதாரத்தால் மட்டுமே ஒரு புரட்சியை செய்ய முடியும் இல்லையென்றால் முடியாது என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் இயல்பிற்குத் தக்கவாறான பிரச்சனைகளை முன்னிறுத்தி பாதிக்கப்பட்ட சக்திகள் அமைப்பு ரீதியாக போராட வேண்டும். அதற்கு கம்யூனிசம் கூடத் தேவையில்லை.

எடுத்துக்காட்டாக கியூபப் புரட்சி. கியூபப் புரட்சி ஒரு கம்யூனிசப் புரட்சியல்ல. அங்கேயிருந்த கம்யூனிஸ்டுகளின் கபடம் பிடிக்காமல் ஒதுங்கியவர்தான் பிடல் காஸ்ட்ரோ. ஆனால் அதற்குப் பின் மார்க்சின் கொள்கைகளை ஏற்று இடதுசாரி ஆட்சிமுறையைக் கொண்டு வந்தார். அதுவும் கூட இன்றளவிலும் ஒருகட்சி ஜனநாயகம் தான். இன்னொரு சந்தேகம், ஒரு கட்சி மட்டும்தான் என்றால் அது எப்படி ஜனநாயகம் ஆக முடியும்? பெனிவேலண்ட் டிக்டேட்டர்சிப் என்றும் அதனைச் சொல்லலாம். ஸ்டாலினைப் போல. ஸ்டாலினும் ஒரு சர்வாதிகாரிதான். (ஏன் ஸ்டாலினுக்குப் பின் முதலாளி வர்க்கம் கையோங்கியது என்று உணர்ச்சிவசப்படாமல் யோசியுங்கள், அப்போது புரியும், ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்யும் வெறும் சர்வாதிகாரியாக இருந்து இறந்துவிட்டார் என்று. கம்யூனிசத்திற்குத் தேவையான கட்டமைப்பை பெரிதாக செய்துவிடவில்லை.) ஆனால் அடித்தட்டு மக்களுக்கான சர்வாதிகாரி. அதாவது பாட்டாளி மக்கள் சர்வாதிகாரி.

கம்யூனிசம் என்பது இதுநாள்வரை உலகில் எங்குமே இருந்ததேயில்லை Primitive Communism தவிர. கம்யூனிசம் என்பது மார்க்சு சொல்வதைப் போல ஒரு அரசில்லா பொது உடமைச்சமூகத்தின் உயரிய மக்கள் பண்பாடு (அது ஒன்றைத்தான் Communism என்று சொல்லமுடியும்). அதை நோக்கி சமூகம் இயங்கும் என்பது மார்க்சின் கணிப்பு. மேலும் அதற்கான போராட்டத்தை வர்க்க சக்திகள் உரிய நேரத்தில் கையில் எடுக்காவிட்டால் சமூகம் மீண்டும் காட்டுமிராண்டித் தனமாக மாறிவிடும் என்றும் சொல்கிறார் மார்க்சு. ஒருவேளை அந்தப் புரட்சிக்கான தருணம் தப்பிவிட்டதா என்று கூட அய்யப்படவேண்டியதாக இருக்கின்றது. அவர்கண்ட பாட்டாளி வர்க்கப் போராட்டம் அய்ரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ நடைபெறவில்லை. இன்னும் நடைபெறவில்லை. அமெரிக்காவின் வர்த்தக நிறுவனங்களின் ஊழல் சந்தி சிரித்து மக்கள் தெருவிற்கு வந்த பின்னும். ஏன்? ஏன் மக்கள் வர்க்கமாக ஒன்றிணைய முடியவில்லை?

முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமாக ஏகாதிபத்தியம் வந்துவிட்டது என்று லெனின் சொன்னார். ஏகாதிபத்தியம் என்ற கூறு மார்க்சின் ஆய்வில் இருந்தாலும் அப்படிப்பட்ட சமூக முறையை மார்க்சு தனியாகப் பிரித்துக் கணிக்கத் தவறிவிட்டாரா? அல்லது அப்படிப்பட்ட தனி சமூக முறை இல்லையென்பதாலா? எனில் முதலாளித்துவத்திற்குப் பின் ஏகாதிபத்திய உச்சம், அதற்குப் பின்? யார் கணிப்பது இந்தச் சமூக இயக்கத்தை? அது எல்லா சமூகத்திற்கு ஒரே மாதிரியாகவும் இருக்காது. மார்க்சியம் உண்மையிலேயே நம்மை சரியாக வழிநடத்துகின்றதா?

சொல்லுங்கள், மார்க்சிய லெனினிய மாவோயிச சக்திகளே, இந்தச் சமூகத்தின் இன்றைய கட்டம் என்ன, அடுத்த கட்டம் என்ன? மார்க்சிய மூலவர்களை உய்த்துணர்ந்து கணித்துச் சொல்லுங்கள். மிஞ்சிப்போனால் என்ன சொல்வீர்கள். அடுத்த கட்டம் ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான போர் என்று சொல்வீர்கள். சரி அதற்குப்பின்னாவது வர்க்க சக்திகள் புரட்சியை கையில் எடுக்குமா? எடுத்தால் தான் புரட்சி. மார்க்சியம் என்பதே மாற்றுவதற்கான சித்தாந்தம் அல்லவா? ஆனால் ஏகாதிபத்தியங்கள் சமரசம் செய்துகொள்கின்றனவே. புரட்சிக்கான தருணத்தை வர்க்க சக்திகள் தவறவிடும் ஒவ்வொரு முறையும் மார்க்சியம் அழுகின்றது. மார்க்சின் கோட்பாட்டின் படி வரவிருக்கும் சமூகத்தின் உற்பத்தி சக்திகள் நிகழ்கால சமூகத்தில் தோன்றி வளர வேண்டும் அல்லவா? முதலாளித்துவத்திற்கு முன்னிருந்த எல்லா சமூகத்திலும் ஆளும் வர்க்கங்கள் சண்டைபோட்டுக்கொண்டு அடுத்தகட்ட ஆளும் வர்க்கம் கோலோச்சுகிறது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் மட்டும் தான் ஆளும் வர்க்கத்தை எதிர்க்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு வெல்லும் திறன் இருக்கிறது என்று கூறுகிறார். ஆக பாட்டாளி வர்க்கத்தினுடைய உற்பத்தி சக்தி என்ன? பாட்டாளி வர்க்கமே ஒரு உற்பத்தி சக்திதான். அது சர்வாதிகாரம் செய்து முதலாளித்துவ சக்திகளை எல்லாம் ஒழித்து கம்யூனிசப் பண்பாட்டை வளர்க்க வேண்டும். அதற்கு உலகம் தழுவிய கம்யூனிசக் கூட்டணி தேவைப்படுகிறது. சோவியத் ரசியா காலத்தில் செஞ்சீனம் இருந்தும் கூட்டணி சக்தியாக வளராமல், விரிசல் ஏற்பட்டு முரண்பட்டிவிட்டார்கள், பெரிய ஏமாற்றமே.

மாவோ கண்ட செஞ்சீனம் இப்பொழுது எந்த வழியில் செல்கின்றது? ஏன் முதல் கட்ட புரட்சியாளருக்குப் பின் வருவோர் எல்லாம் ஏமாற்றிவிடுகிறார்கள்? அது எதன் குறை? தனி மனித குறையாக இருக்க முடியாது. சித்தாந்ததில் என்ன பிழையிருக்கின்றது? தேடவேண்டிய அவசியம் இருக்கின்றது?

இன்றைய சீனம், அண்டை நாட்டில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டும் காணமல் விட்டுவிட்டு, இலங்கைப் பேரினவாதத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தில் வக்காளத்து வாங்குகின்றதே? இலங்கையின் இனப்படுகொலைக்கு மூடுதிரை போடுகிறதே. இதன் பொருள் என்ன? அமெரிக்கக் கொடியை எரிப்பாய் போற்றி ம.க.இ.கவே சீனத்தின் கொடியை தீயிட்டுக் கொளுத்தத் தயாரா? இதோ தீக்குச்சி.

சோவியத் ரசியாவே, ஸ்டாலின் காலத்தில், உலகப் போரில் தனது கூட்டணியான இங்கிலாந்திற்கு எதிராக தனது உதவியை நாடிய சுபாஷ் சந்திர போசுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உதவ முடியாது என்று கைவிரித்து விட்டது. அது ஏனோ? அப்படி உதவி பண்ணியிருந்தாலாவது சுபாசின் கீழான ஒரு கம்யூனிச இந்தியாவை நாம் அப்போதே கண்டிருப்போம். கண்டிருப்போமா, இல்லையா? அல்லது அதற்கு வாய்ப்பு இருந்ததா இல்லையா? ஆசியாவே கம்யூனிச ஆசியாவாக ஆகியிருக்கும். இது ஸ்டாலினின் தொலை நோக்கு பார்வையற்ற செயலா? உணர்ச்சிவசப்படாமல் யோசியுங்கள். நமக்கு யார்மீது தனிநபர் வழிபாடு வேண்டியதில்லை. அது தான் கம்யூனிசம். இட்லரின் ஜெர்மனியை எதிர்த்துக் கொண்டே ஆசியாவில் காலணியாதிக்கத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான சக்திகளை ஊக்குவிப்பதில் பெரிய சிரமம் இருந்திருக்க முடியாது.

ஸ்டாலினின் பிழைகள் என்று ஒரு சமூக ஆய்வு இந்தவகையில் மார்க்சியத்திற்குத் தேவைப்படுகிறது என்பது என்னுடைய அபிப்பிராயம். அது மாவோவிற்கும் பொருந்தும். கம்யூனிச சக்திகளே தீவிரமாக உண்மையாக சுயபரிசீலனை செய்யுங்கள். உங்கள் சமூகத்தின் தன்மையை சரியான கோணத்தில் ஆய்வு செய்யுங்கள். கம்யூனிசம் உதவியாக இருக்கலாமேயொழிய கடிவாளமாக இருக்கக் கூடாது. இந்த உலகத்தில் ‘ஒரே ஒரு சரி’ மட்டும் தான் இருக்க முடியும் என்று முட்டுச் சந்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஆனால் நாம் பின் நவீனத்துவ வாதியல்லோம். அறிவியலில் மட்டும் தான் ‘ஒரே ஒரு சரி’ என்று கூற முடியும். சமூகம், பண்பாடு, ஜனநாயகம் போன்ற தளங்களில் அப்படி எதுவும் இல்லை. சமூகவியலையும் ஓர் அறிவியல் என்று சொன்னாலும் ஒரு அறிவியல் புலமாக அது இல்லையே.

ஒரு சமூகத்தின் தன்னியல்பிலான சீற்றம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு அதன் வழியாக மக்களை ஒன்றுதிரட்டி புரட்சி வென்று, அதற்கடுத்த கட்டமாகத்தான் இடதுசாரித் தன்மையை அதனுள் புகுத்த முடியும், வேண்டும். இல்லையென்றால், இயல்பற்ற வழியில் ஒன்று திரட்ட முடியாமல், ஆரம்ப கட்டத்திலேயே கம்யூனிசம் தோற்றுப் போச்சே என்ற பழிச்சொல்லை கம்யூனிசத்திற்கு வாங்கிக்கொடுக்காதீர்கள். எதையுமே புரிஞ்சுக்காம போராடாதீங்கப்பா.

மற்றொன்று, திராவிட இயக்க மரபில் நின்று போராடிக்கொண்டு திராவிட இயக்க சமூகக் காரணிகளைப் பயன்படுத்திக்கொண்டு வர்க்க வேடம் போடவேண்டாம். வரலாற்றைத் திரிக்க வேண்டாம்.

தமிழகத்தில் புரட்சிகர சக்தியாக முன்வர வேண்டுமென்றால், பெரியாரைக் கையில் எடுக்காமல் முடியாது. பெரியாரியக் களத்தில் நின்றுகொண்டு போராடி அதற்குக் கம்யூனிச முகமூடி போட்டுக்கொண்டால் இங்கே கம்யூனிசம் தான் வெல்கிறது என்று முன்னிறுத்தலாம். அப்படி கம்யூனிசத்தை முன்னிறுத்திவிட்டால், பெரியாரியலும் திராவிட இயக்க மரபையும் குழிதோண்டிப் புதைத்துவிடலாம். இடையிடையே பெரியார் தவிர்த்த திராவிட இயக்கத்தை விமர்சனம் செய்து ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையும் கிரகணத்தால் மூடிவிடலாம். பிறகு இங்கே பெரியாரும் இல்லை, திராவிட இயக்கமும் இல்லை, கம்யூனிசம் மட்டும் தான் என்று வரலாற்றை திசைதிருப்பிவிடலாம். என்றெல்லாம் இயல்பாகவே அயோக்கியத் தனமாக பார்ப்பான் ஒருத்தன் தான் சிந்திப்பான். ம.க.இ.க வில் பார்ப்பான் யாரும் இல்லையே! எச்சரிக்கை. கிரகணம் கொஞ்ச நேரம் தான்.சூரியன் தான் நிரந்தரம்.

பெரியாரின் தத்துவத்தை வென்றுவிட்டு கம்யூனிச சித்தாந்தத்தை முன்னிறுத்துங்கள். ஏற்றுக்கொள்கிறோம். பெரியாரிய களத்தில் கம்யூனிச வேடம் போடுவதால் பெரியாரியலை குழிதள்ள முடியாது. கம்யூனிசமே பெரியாரியல் பக்கம் தான் நிற்கும். வேண்டுமென்றால் என் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அக்ரகாரத்தில் போய் ஆள்பிடித்துக்கொண்டு, கூட்டம் திரட்டிக்கொண்டு வாருங்கள் பார்ப்பானையும், சமஸ்கிருதத்தையும் எதிர்த்து வீழ்த்த. நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் கம்யூனிசத்தை. செய்ய முடியுமா?

இதுவே எனது புரிதல். எதையும் சந்தேகிப்பாய்; சிந்திப்பாய்; செயல்படுவாய்.

4 comments:

Anonymous said...

ரி இதில் உள்ள மற்றொரு ரகசியத்தையும் இங்கே சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஏதோ இவர்கள் பார்ப்பனீத்தை எதிர்ப்பதற்கு பிறந்தவர்கள் போல் பேசுவார்கள்... ஆனால் அது நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புவதற்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவர்களது தலையே ஒரு பார்பனீயத் தலைமைதான். குறிப்பாக வல்லபேச என்கின்ற பார்ப்பனர் மருதையனாகவும், ரெங்கராஜன் என்கின்ற பார்ப்பனர் வீராச்சாமியாகவும் மாறியது ஏன்? அதுவும் மருதையன், வீராச்சாமி எல்லாம் தலித் அடையாளத்துடன் கூடிய பெயர்கள் என்பதை மறக்கக் கூடாது? இதுதான் மர்மம். ஏதோ தாங்கள் எல்லாம் தலித் மக்களின் நண்பர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலி மனோபாவம்.

Anonymous said...

பொச்சரிப்பின் திருவுருவமாகத் திகழும் கருந்திணையே, வலிப்பு வந்தது போல் உளறாமல், நீங்கள் சொல்லிய 'பெரியாரியலை' நடைமுறைப்படுத்தி தில்லை முதல் ஈழம் வரை வெற்றிகளை ஈன்றெடுக்கலாமே, ஏன் சீனத்தின் கொடியைக் கூட கொளுத்தலாமே, நாங்கள் யாரும் உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லையே, உங்கள் அரசியலை சற்றே நடைமுறையில் நிரூபித்துக் காட்டினால் மகிழ்வோம்.

signaram said...

Well said Karunthinai. In the history of communism in india or elsewherein the world no such authenticated questions were raised against communism. You article compelled all of us to revisit the validity of mechanical communist interpreatations. your criticism which is worthwhile and opend the eye. No communist can collect or gather a mass from 'Agraharam' to fight against the so called 'paarpaan' and the sanscrit cultural invasion on the other ethnic nationalities. The only people who fought against it are dalits and backward community. Communism cannot do it. The so called pseudo communists cannot use the class struggle to defeat the caste monopoly. Periyarism had achieved more in this field than communism. The barhmins intruded the communism and spoilt it in india.
Yes, you are true that 'nandhigram' could not be created because of the lack of class forces in tamil nadu. They use only dalits and backward people for all sorts of field works and such people are put at risky jobs to fight in the field. This is what the Sangh Parivar doing. What is the difference between them.
Karunthinai has very well established the inability of the communism.
The last question of your article is a million dollar question. It is the reality. Keep it up. All the progressive forces are now looking at karunthinai.
I ask P.A.L.A how may brahmins in your organisation are in the field work, and how many brahmins are in the top ranks?
They cannot answer this question also.
Karunthinai, your observations are path breaking.Your article will make them angry. Let them cry loudly.Other than cry they can not answer your questions in a rational manner.
-stephens

signaram said...

பெரியாரியல் சர்வரோகநிவாரணியா இல்லையா என்பது அல்ல வாதம். இன்றைய தமிழகத்தில் நடந்த தில்லைச் சமரில் பயன்படுத்தப்பட்டது பெரியாரிய மரபு தானே அன்றி, வர்க்க மரபு அல்ல என்பதே. கருந்திணை எழுத்தாளரும் ஒரு கம்யூனிஸ்டு காரர்தான் போலத் தெரிகிறது. ஆனால் அதன் இயலாமை பற்றி அவர் கவலைப்படுகிறார். ஏனெனில் கம்யூனிசம் என்ற சித்தாந்தத்தை விளக்கிப் புரியவைத்து அக்ரகாரத்திலிருந்து ஒரு புரட்சிகர கூட்டத்தைக் கூட்டிவந்து பார்ப்பன பாசிசத்தையும், சமஸ்கிருத பண்பாட்டு ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராட களப்பணியாளர்களை உருவாக்க முடியுமா என்பது தான் கேள்வி. அது தான் முடியாது என்பது வெட்ட வெளிச்சம். எனவே கம்யூனிசம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட முடியவில்லையே என்பது தான் சமூக எதார்த்தம். நமது சமூகத்திற்காகத்தான் நாம் போராடுகிறோமே தவிர கம்யூனிசத்திற்காக ஒரு போராட்டம் என்பது இல்லை. கம்யூனிசக் காதல் என்பது ஒரு மன வியாதி அவ்வளவு தான்.
கங்கைகொண்டானில் நந்திகிராமம் உருவாக்க முடியவில்லை. ஆனால் அதை இயல்பாக ஒரு மம்தா பானர்ஜி செய்ய முடிந்திருக்கிறது என்றால் அது நக்சல்பாரி மரபு.
விவாதிக்கும் போது நாம் எந்தச் சமூகத்தில் இருந்து விவாதிக்கிறோம் என்பது முக்கியும். கருந்திணை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து தான் பெரியாரியலையும், கம்யூனிசத்தையும் விவாதிக்கிறது. எனவே சமூகம் தான் முக்கியம். ஜான் பொலிட்சர் (கம்யூனிச தத்துவ அறிஞர்) சொல்வதுபோல தத்துவம் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும். எனவே அன்னாந்து பார்த்து யாரும் கொட்டாவி விடவேண்டியதில்லை. சமூகத்தைப் பாருங்கள்.
ஒரு அரங்கக் கூட்டத்தில் ம.க.இ.க சென்னை கம்யூனிச போதகர் ஒருவர் மறுகாலணியாதிக்கத்தை எதிர்ப்பது தொடர்பாக, பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும், தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று கூறினார். கூட்டத்திலிருந்த நாங்கள் எல்லோரும் அப்படியென்றால் நாம் பயன்படுத்தும் ‘நோக்கியோ’ செல்போனை என்ன செய்வது என்று கேட்டோம். அதற்கு அவர், போன் நோக்கியோ பயன்படுத்திக்கொள்ளுங்கள் வேறவழியில்லை, சிம்கார்டு வேண்டுமென்றால் பி.எஸ்.என்.எல் பயன்படுத்துங்கள் என்று கூறினார். நாங்கள் திருப்தி அடியவில்லை. அதைத் தெரிவித்தோம். ஆனால் அந்த விவாதத்தை அவர் அத்தோடு முடித்துக்கொண்டார்.
பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை தீயிட்டுக்கொளுத்தும் ம.க.இ.கவின் போராட்டம் என்ன ஆனது? அது இயல்பற்ற, நடைமுறைத் தன்மையற்றதாகிவிட்டது. பெரும்பாலான ம.க.இ.க தோழர்கள், சோனி, சாம்சங், சான்சூயி, ரிலையன்ஸ், டாடா இண்டிகாம், போன்றவை தயாரிக்கும் பொருட்களைத் தான் இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு தோழரிடம் கேட்டேன், அதற்கு அவர் பதில் சொன்னார், ‘அட ஏங்க, அது எல்லாம் ஆகிற கதையா’ என்று அலுத்துக்கொண்டார். எனவே போராட்டமும் அதன் தத்துவமும் நடைமுறைத் தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பது அவசியம். அது அந்தப் போராட்டத்தில் இல்லை. தோழர்களே இப்படியென்றால், பொதுமக்கள்? கொஞ்சம் யோசிங்கப்பா?
பெரியாரின் பார்வையிலேயே, பொருளாதாரப் புரட்சிக்கு கம்யூனிசத்தைதான் பயன்படுத்தவேண்டும். ஆனால் பார்ப்பானை எதிர்க்க ஆரியப் பண்பாட்டு எதிர்ப்பை வீழ்த்த இந்த மண்ணில் பெரியாரியலை விட்டால் வேறவழியில்லை. அதற்கு தில்லைப் போரே சாட்சியம். அதன் மூலவர், கருந்திணை சொன்னது போல் பெரியாரே. நானும் தில்லை மாநாட்டிற்கு சென்றிருந்தேன். சம்பந்தமே இல்லாத மார்க்சு, எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ மட்டும் தான் மேடையில் இருந்தார்கள் வெறும் படங்களாக. ஆனால் அன்றைய தத்துவம் என்பது பெரியாரியலாகத் தான் இருந்தது. பெரியார் தாசன் நிறைய பேசினார். அவர் ஆளு கொஞ்சம் அப்படியிப்படி இருந்தாலும் பெரியாரியலை சரியாகவே பேசினார். அவர் ஒரு கேள்வி கேட்டார், “தீட்சிதன் போயி சுப்ரீம் கோர்ட்டிலே அவனுக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கிட்டு வந்துட்டான்னா, நீங்க இப்ப வெற்றி மாநாடு கொண்டாடுறீங்களே, அப்ப என்ன எழவு மாநாடா கொண்டாடுவீங்க”. பார்ப்பனீயம் ஒரு அகில இந்திய கட்டமைப்பு. அதாவது அதுதான் இந்தியக் கட்டமைப்பின் அச்சு என்றும் கூட சொல்லலாம். உயர்நீதி மன்றத்தில் நிறைய தமிழ்ச் சிந்தனையாளர்கள், பார்ப்பன எதிர் சிந்தனையாளர்கள் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் நீதிபதிகளாக இருக்கிறார்கள். ஆனால் உச்ச நீதி மன்றத்தில் அப்படிப்பட்ட வாய்ப்புகள் குறைவாகத்தான் உள்ளது. பார்ப்பான் உச்ச நீதி மன்றத்திலும் வீழ்த்தப்பட வேண்டும் என்பது நமது தாகம்.
ஒன்னுமில்லை, ராமர் பாலம் இன்னும் கிடப்பில இருக்கிறது, இதே உச்ச நீதிமன்றத்திலே. என்ன கொடுமை இது.
தமிழகத்தில் தமிழின உணர்வு என்றுமே நீரு பூத்த நெருப்பாகத்தான் உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. கடந்த சில மாதங்களாக அது எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. புரியவைக்கப்படவும் ஆனது. ஆனால் அந்தத் தமிழின உணர்வு தமிழ் தேசிய இன உணர்விற்கான விதையும் வீரியமும் உடையது. அதனை ஒரு அரசியல் கட்சி எடுத்துச் செய்ய வேண்டும். அதற்கான கட்சிகள் எல்லாம் திமுக விலிருந்து எல்லோரும் ஏமாற்றி விட்டார்கள். தேசிய நீரோடை (சாக்கடையில்) நீந்திக்கொண்டு இருக்கிறார்கள். இன்றை களத்தில் தமிழின உணர்வை இரண்டு அணிகள் மறைத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்று ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள், மற்றொன்று ம.க.இ.க. அவர்கள் ஈழச்சிக்கலில் முன் வைத்திருக்கும் எதிரி இரண்டாம்பட்ச மானவன் தான். ஆனால் முதல் எதிரி பார்ப்பன பாசிச தேசிய இன ஒடுக்கல் இந்தியாவே. தேசிய இன எழுச்சியை மார்க்சியம் அங்கீகரிக்கின்றது. லெனின் அங்கீகரிக்கின்றார். ஆனால் மார்க்சியம் பேசும் ம.க.இ.க அந்தச் சுழல் நிதர்சனமாக கண்முன் தெரியும் போதும் அதை மழுங்கடிக்கும் சதியில் ஈடுபடுவது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவது உண்மையே.
செஞ்சீனத்தின் கம்யூனிச துரோகம் மிகவும் கொடுமையானது. அதை மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவனும் எதிர்ப்பான். எதிர்க்கிறான். ம.க.இ.க? சீனக்கொடியை ம.க.இ.கவால் எரிக்க முடியாது. அது கம்யூனிசக் கள்ளக்காதல். தமிழனாவது புடலங்காயாவது என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
கருந்திணை சொல்வது போல கம்யூனிசம் என்பதே ஒரு சமூகத்தில் எதார்த்தமாக இருக்கின்ற சீற்றத்தை ஒழுங்குபடுத்தி புரட்சி செய்வதுதான். ஆனால் இங்கிருக்கின்ற கம்யூனிஸ்டுகளோ வர்க்கப் புரட்சி பற்றி கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். அவலை நினைத்து உரலை இடித்த கதையாக. வர்க்கப் பிரச்சனையை முன்னிறுத்தியவுடன் ஈழம் ஏற்றிய இன உணர்வை கருவறுத்துவிட்டு, கிளர்ச்சியும் செய்ய முடியாமல் கங்கைகொண்டானாக்கிவிட்டார்கள். இப்ப சந்தோசமாப்பா. ஒரு கட்டமைப்பான இயக்கம் என்பது தத்துவ அரசியலில் வெல்லவேண்டும். கூட்டம் மட்டும் கூட்டினால் போதாது. அதுதான் கங்கைகொண்டானுக்கும் தில்லைக்கும் உள்ள வேறுபாடு. அதனால் கங்கைகொண்டானில் போய் பெரியாரியலைப் பயன்படுத்த முடியாது. பெரியாரியல் நம் சமூகம் சார்ந்த தத்துவம். வர்க்கம் சார்ந்தது அல்ல. வர்க்கப் போராட்டத்திற்கு பெரியார் கம்யூனிசத்தைதான் முன்னிறுத்துகிறார். அவரும் சிங்காரவேலரும் சேர்ந்து போராடிய நாட்கள் ஆராயத்தக்கது. அது தான் பாலபாடம். ஆனால் தமிழகத்தில் இயங்கு சக்திக்குத் தக்கவாறு யோசிக்கும் போது பார்த்தால் வர்க்கப்போராட்டம் கண்ணில் தெரியவில்லை. சாதியாலும், மிகப்பெரிய மத்தியதர வர்க்கத்தாலும், பார்ப்பன சதியாலும் மண்டிய இந்தியாவில் அதற்கான பின்னடைவுகள் நிறைய. நந்திகிராமம் இல்லையென்றால் குஜராத் என டாடாவிற்கு இந்தியா வழிகாட்டுகிறது. வர்க்கப் போராட்டத்தின் எதார்த்த சிக்கலை தத்துவ ரீதியாக ஆராய்ந்து, நடைமுறைக்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் கம்யூனிச சக்திகளுக்கு உள்ளது. அதைவிட்டுவிட்டு கருந்திணையைக் கோபித்துக்கொண்டு பிரயோசனம் இல்லை. கம்யூனிஸ்டுகளே சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். இல்லையேல் முட்டுச்சந்து எதிரில் நிற்கிறது, எ.கா.கங்கைகொண்டானும், பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் எரிப்புப் போராட்டம் போல.
ஸ்டாலின், சுபாஷ் சந்திர போசு வரலாறு முக்கியமானது. கம்யீனிசத்தால் விரட்டிவிடப்பட்டவர் தான் போசு. அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்று பல முறை சொல்லியிருக்கிறார். அது உண்மை. ஸ்டாலின் இந்தியாவிற்குச் செய்தது பச்சைத் துரோகம். இந்தியாவிற்கு மட்டுமல்ல கம்யூனிசத்திற்கே. இந்தியா, சோவியத் ரஷ்யா, சீன, வியட்நாம், வடகொரியா இந்த நாடுகள் போதுமே ஆசியாவை கம்யூனிச ஆசியாவாக்க. எதையுமே மோலோட்டமாக, கம்யூனிசத்தின் மீதும் ஸ்டாலின் மீதுமுள்ள வழிபாட்டின் அடிப்படையில் யோசிக்காதீர்கள். கருந்திணையின் நிதர்சனத்தை யாரும் மறுக்க முடியாது.
மேலும் தேசிய இன விடுதலை என்பது மற்ற இனங்களை அடிமையாக்கும் தன்மையது அல்ல. ஏனெனில், கியூப விடுதலை என்பது தமது நாட்டின் விடுதலையேயன்றி மற்ற நாடுகளை அடிமைப்படுத்தவில்லை, படுத்தாது. ஒரு தேசிய இனம் விடுதலைக்காகப் போராடும் போது மீட்சியைப் பற்றியும், அடிமை எதிர்ப்பைப் பற்றியும் தான் எழுகின்றது. அதுதான் அதன் எதார்த்தம். அதன் அரசியல். கம்யூனிசம் மட்டுமே அரசியல் அல்ல(அப்படி கனவு கண்டுகொண்டிருக்காதீர்கள்). பிரஞ்சுப் புரட்சியில் விளைந்தது தான் சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்பவை. பிரஞ்சுப் புரட்சி கம்யூனிசப் புரட்சியல்ல. இன்னும் சொல்லப்போனால் மார்க்சின் தத்துவத்திற்கு இந்த மூன்று தத்துவங்கள் முதுகெழும்பு. இன விடுதலையில் நாம் பார்க்க மறுக்கும் யதார்த்தமான தத்துவ அரசியல் இருக்கின்றது. ஆனால் நாம் எப்போதுமே கம்யூனிசக் கண்ணாடியையே நம்பி குருடர்களாக இருக்கின்றோம்.
நிறைய விவாதிக்க வேண்டியது இருக்கின்றது. ஜான் பொலீட்சரை மறந்து விடாதீர்கள். ஒரு சித்தாந்தமும், அதன் அரசியலும் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும். தில்லையில் பெரியாரில் நின்றது போல. இது வரலாறு. நாம் எவ்வளவுதான் அழுதாழும், புலம்பினாலும் கருந்திணை சொன்னது போல பார்ப்பன பாசிசத்தையும், சமஸ்கிருத ஆதிக்கப்பண்பாட்டை எதிர்த்து வீழ்த்த அக்ரகாரத்திலிருந்து புரட்சிக்குக் கூட்டம் கூட்ட முடியாது.
கம்யூனிச முகமூடியைப் போட்டாது பெரியாரியலைத்தான் அங்கே பயன்படுத்த வேண்டியதாக இருந்தது.
திருவரங்கக் கருவறைப் போராட்டம் ம.க.இ.கவிற்கு பெரியாரியலிச் சொல்லித்தந்த போராட்டம். அது ம.க.இ.கவிற்கு ஆரம்ப கால பெரியாரியல் பரிசோதனை. இந்த சமுதாயத்தில் பார்ப்பானை எதிர்க்க பெரியாரியல் தான் தேவை என்பதை உணர்த்திய போராட்டம் அது. ஆனால் பார்ப்பன பயங்கரவாத மாநாடு தஞ்சையில் நடந்தபோது பெரியார் அநாதையாக நின்றிருந்தார். கம்யூனிச மூலவர்கள்தான் எங்கு பார்த்தாலும். ஆனால், ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் நடந்தது. பெரியார் தாசனின் மிக முக்கியமான, இந்துத் தத்துவ இயலா, இந்தியத் தத்துவ இயலா என்ற சிறந்த உரை வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை ம.க.இ.கவின் பெரியாரியல் கிளையின் கொ.ப.சே.வாக அவர் அமர்த்தப்பட்டுவிட்டார். ஏனென்றால், சமூகத்தின் தேவை. அந்த மரியாதையை பெரியாருக்கும் கொடுங்கள். அவ்வளவுதான் கருந்திணை கேட்கிறது. மார்க்சு, எங்கல்ஸ், பெரியார், லெனின், ஸ்டாலின், மாவோ என்று உங்கள் மேடை அலங்கரித்தால் மகிழ்ச்சி. ஏனென்றால் பார்ப்பானையும் அவனது ஆதிக்கப்பண்பாட்டையும் எதிர்த்து நாம் போராடும் தத்துவ மரபு பெரியாரும், திராவிட இயக்கமும் ஏற்படுத்தியது. அது இந்திய அரசியலில் தேசிய இன விடுதலைக்குச் சமமானது மட்டுமன்றி தேவையானது. பெரியார் தேசிய இன விடுதலையை ஆதரித்தவர் அல்லர். அவருக்கு தேசியம், இனம், மொழி என்ற பற்றே கிடையாது. ஆனால் பார்ப்பன இந்தியாவிலிருந்து பிரிந்த தனிநாடு வேண்டியவர். அதன் யதார்த்தம் இன்றும் பொருந்தும். தேசிய இன விடுதலை என்ற பார்வை தவிர்த்தாலும் அது உண்மைதான். ஆனால் எந்த உணர்வை எந்த அரசியலை முன்னிறுத்துவது? பெரியாரிஸ்டுகளிடமே விட்டுவிடுவோம் விடைசொல்ல.

தில்லைப் போராட்ட முதல் வெற்றிவிழா மேடையில் முழங்கிய வார்த்தைகள், வேறு யாரோ அல்ல, தோழர் மருதையனும், தோழர் ராஜாவும் பேசியவை. இதைக் கேட்டால் திரு. வேல்முருகம் சட்ட மன்ற உறுப்பினர் இந்தப் போராட்டத்தில் எவ்வளவு முக்கியப் பங்காற்றி உள்ளார் என்று தோழர்களுக்குப் புரியும். “இந்த மேடையிலே உரையாற்றிய அனைவரும் இந்தப் போராட்டத்தில் உண்மையாகவே பங்களித்திரு அமர்ந்திருப்போர் அனைவரும் உண்மையிலே இந்தப் போராட்டத்தில் பங்களித்திருக்கிறார்கள் அதன் காரணமாகவே விவராங்களுடன், ஈடுபாட்டுடன் பேசினார்கள் . . . . மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு . . . பல்வேறு பா.ம.க., தி.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோரோடு இணைந்து இறுதிவரை விரிசலின்றி ஒற்றுமையாகப் போராட்டி வெற்றி கண்டுள்ளோம் . . . . . போராட்டம் பல நடத்தியிருந்தாலும் இது வெற்றிகள் அரிதான காலம் . . . இந்தப் போராட்டத்திற்கு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி, ஆதரவு தெரிவித்த முதல் அரசியல் தலைவர் திரு வேல்முருகன் . . . சிற்றம்பல மேடையில் தமிழ் பாட சட்டம் இயற்றப்படுவதற்கு பல சதிகள் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த போது அதைத் தகர்த்து உரிய நேரத்தில் அந்தச் சட்டம் நம் கையில் பெற காரணமாக இருந்தவர் திரு.வேல்முருகன் அவர்கள் . . . மீண்டும் மீண்டும் திரு வேல்முருகனின் கேள்விகள் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டு பெரிய பிரச்சனையை உண்டாக்குகின்றது என்பதால் போலீசை அனுப்பித் தமிழ்பாடுவதற்கு அரசு ஏற்பாடு செய்தது என்பது உண்மை . . . இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் . . . .போராட்டத்திகான நிதி செலவை நானே செய்கிறேன் என்று சொல்லி, ரூ.10,000 உடனே கையில் கொடுத்தவர், திரு.வேல்முருகன் அவர்கள், . . . அவரை இந்தப் போராட்டத்திலே வெற்றிவிழாவிலே பதிவு செய்யவேண்டும் . . . அவருக்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பிலும் போராட்டக்குழுவின் சார்பிலும் நமது நன்றியை கரவொலி எழுப்பிப் பாராட்ட அன்போடு வேண்டுகிறேன்” ஆதாரத்தோடு நான் பேசுகிறேன்.
மேலும் ஒரு விசயம். தொல்.திருமாவளவன் தில்லைக் கோயிலுக்குப் போனவுடன் தீட்சிதர்கள் கொடுத்த மரியாதையையும் அதை அவர் ஏற்றுக்கொண்டதையும் புகைப்படம் போட்டு கேவலப்படுத்திய புதிய ஜனநாயகமும், புதிய கலாச்சாரமும், ம.க.இ.க தோழர்கள் தில்லைப் போரில் எதிர்க்க வேண்டும் என்றுத் தெரிந்தே கோவிலுக்குள் போய் தீட்சிதர்களின் மரியாதையை ஏற்று கை கூப்பி நின்றதை எந்த வகையில் விமர்சனம் செய்கிறது. குறந்த பட்சம் அந்த மரியாதையை உடனடியாக கழற்றியாவது போட்டிருக்கவேண்டும் தோழர்கள். ஆனால் அதை ஏற்றுக்கொண்டு மெய்மறந்து நின்றது எந்த அளவுகோலால் அளக்கப்படவேண்டியது? இதில் ஒரே ஒரு மாவீரன் ஆறுமுகசாமி அடிகள்தான். தீட்சிதர் மரியாதையை வேண்டாம் என்று புறக்கணித்து நின்றாரே. போராட்ட நாயகன் அல்லவா அவர்.
ஒவ்வொரு விசயத்தையும் கூர்ந்து ஆராய வேண்டிய காலகட்டத்தில் எல்லோரும் இருக்கின்றோம். விமர்சனத்தை ஏற்றுக்கோள்ள வேண்டும். கோவப்பட்டு என்னப்பா ஆகப்போகிறது.
எதைப் படித்தாலும், கேட்டாலும், பார்த்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆய்வு செய்து சிந்திப்போம், விவாதிப்போம். சமூகத்திற்கானதுதான் சித்தாந்தம் சித்தாந்தத்திற்காக அல்ல சமுதாயம், அப்படி எந்தச் சமுதாயமும் இருக்க முடியாது. இதைத் தான் பெரியாரும் சொன்னார், பெரியாரியலும் சொல்கிறது.
நன்றி தோழமையுடன்
சிங்காரம்.

Post a Comment