Friday, March 27, 2009

வர்க்க உணர்வில் தமிழினம் எழவில்லை!

ஈழத்தமிழர் பேரழிவை முன்னிறுத்தி தமிழகம் கண்டுகொண்டிருக்கும் கொந்தளிப்பு நாம் உற்றுநோக்கத்தக்கது. வர்க்க உணர்வால் இந்தச் சமூகம் கொந்தளிக்கவில்லை. இன ஒடுக்கல், இன அழிப்பினை முன்னிறுத்தும் போது இந்தச் சமூகம் ஒவ்வொரு முறையும் தவறாமல், இன உணர்வால் கிளர்ந்தெழவே செய்கின்றது. மொழி உணர்வு என்பதும் இன உணர்வின் ஒரு கூறு என்பதால் இந்தச் சமூகம் மொழி உணர்வை முன்னிறுத்தி கொந்தளித்த நிகழ்வுகள் வரலாற்றில் உண்டு. ஆரிய பண்பாட்டு எதிர்ப்பு என்பது தான் இந்தச் சமூகத்தின் அடிப்படை ஒருங்கிணைப்பு சக்தியாக இருந்திருக்கின்றது. இந்தச் சமூகத்தின் உற்பத்தி முறை என்பது பண்ணை முதலாளித்துவமும், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியான தரகு முதலாளித்துவமும் தான். ஆனால் இத்தகு உற்பத்தி முறையானது வர்க்க ரீதியாக ஒரு தெளிவான பிரிவினையை இந்தச் சமூகத்தில் ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் இங்கே தன்னியல்பிலான முதலாளித்துவம் வளரவில்லை, மேலும், இச்சமூகத்தின் சாதி ரீதியான பாகுபாடுகள் வர்க்கங்களை குறுக்கு நெடுக்காக வெட்டுகின்றன. இந்தியாவில், பொதுவில், கம்யூனிச சக்திகள் சாக்கடையாக மாறியதற்குக் காரணம், இங்கிருக்கும் பார்ப்பனர்கள் கம்யூனிசத்தை அதன் இயல்பில் வளரவிடாமல் தடுத்துவிட்டதன் காரணமாகத்தான். ஏனெனில், கம்யூனிசம் அதன் இயல்பிலேயே, பிறப்பு ரீதியான ஏற்றத் தாழ்வுகளையும் அதன் அடிப்படையில் ஒரு சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற எதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ள மறுப்பதால், பார்ப்பனர்கள் அதனைக் கைக்கொண்டு, பார்ப்பனர் எதிர்ப்பை இலாவகமாக மறுத்துவிடுவதால், அது பின் தனது சாரத்தை இழந்து சக்கையாக்கப்படவும் ஆனது. எனவே வர்க்க சக்திகள் வளரமுடியாமல் தத்தளிக்கின்றன.

ஒரு சமூகத்தில் புரட்சி உருவாகவேண்டுமெனில் வர்க்க சக்திகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இது ஒரு பொதுத் தத்துவம். ஆனால் இயக்கவியல் பொருள்முதல்வாதப்படியே கருத்தியல் தளங்கள் அடிக்கட்டுமானத்தின் மீது செலுத்துகின்ற தாக்குரவும் கவனிக்கத் தக்கது. அது இந்தியா போன்ற சமூகங்களில் வியத்தகு வளர்ச்சி கண்டிருக்கின்றன. அவை சமூகத்தின் இரண்டாம் நிலை இயக்கவியல் சக்தியாகவே செயல்படுகின்றன. குறிப்பாக தமிழ்ச்சமூகத்தில் வரலாறு தொட்டு, பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து எதிர்த்து பண்பாட்டு ரீதியான இயக்கவியல் சக்திகள் கூர்மைப்பட்டுவிட்டன. அவற்றுள் இனம், மொழி ஆகியன முன்னிலை வகிக்கின்றன. ஏனெனில் அவைதான் இந்தச் சமூகத்தினை கட்டியிருக்கின்ற ஒருங்கிணைப்பு சக்திகள். கட்டியிருக்கின்ற சக்தி என்பதை அடிக்கட்டுமான சக்தியோடு குழப்பிவிடக்கூடாது. ஏனெனில் எல்லா சமூகத்திற்கும் அடிக்கட்டுமானமான உற்பத்தி உறவுகள் தான் முதல் நிலை இயங்கியல் சக்திகளாகும். ஆனால் அது வளர்த்திருக்க வேண்டிய வர்க்க உணர்வு இங்கே வளரவோ, நிலை பெறவோ இல்லை, நாம் மேற்சொன்ன காரணங்களால். இத்தகு நிலையில் இரண்டாம் நிலை இயங்கியல் சக்திகளை நாம் பயன்படுத்த வேண்டும்.

இன்றைய முற்போக்கு சக்திகள் இந்தத் தெளிவைப் பெற வேண்டும். வர்க்க ரீதியாக ஒருங்கிணைக்கப்பட முடியாத சமூகத்தின் இயல்பான தன்மையைப் புரிந்துகொள்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் இயற்கையான மாற்று ஒருங்கிணைப்பு சக்திகளைப் பயன்படுத்தி புரட்சிக்குத் தயாராக வேண்டும். அவ்வாறு கிடைக்கும் மாற்று ஒருங்கிணைப்பு சக்திகளை வர்க்கங்களாக உருமாற்ற முடியாது. அது நிலைபெறாது. எடுத்துக்காட்டாக, ஈழத் தமிழர் இனப்படுகொலை என்ற நிகழ்வில் இன உணர்வால் கொந்தளித்திருக்கும் தமிழினம் ஒரு வர்க்கமாக ஒன்றியணையாது, மாறாக ஒரு இனமாக மட்டுமே ஒன்றிணையும். ஏனெனில் அது, தான் ஒருங்கிணைந்திருக்கின்ற எதார்த்தத்தில் வர்க்க இயல்பு இல்லாமையே காரணம். இலங்கையின் பொருளாதார வளங்களின் மீதான இந்திய நிறுவனங்களின் சுரண்டல் என்பது 2000-ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட தடையில்லா வர்த்தக உடன்பாட்டிற்குப் பின் தான் வடிவம் பெற்றது. ஆனால் ஈழத்தமிழர் மீதான இந்திய அரசின் ஒடுக்குமுறையானது அதற்கும் முன் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பழையது. அது இந்தியாவின் தெற்காசிய ஆதிக்கக் கொள்கை மற்றும் தமிழ்த் தேசிய இன ஒடுக்கலின் வடிவம். இலங்கைப் பேரினவாதத்திற்கு எதிராக எழுந்த தமிழ்ப் போராளிகளை வளர்த்துவிட்ட, இலங்கையை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முனைந்த, அதே இந்திய அரசு ஈழப் போராளிகளுக்கிடையே சகோதர யுத்தத்தை வளர்த்து விட்டதன் காரணம், அவர்கள் ஒன்றிணைந்து தனி ஈழம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் தான். இந்தியாவால், இலங்கையை பங்களாதேசைப் போலப் பிரித்து பலவீனப் படுத்தியிருக்க முடியும். ஆனால் அப்படி அதனைச் செய்யவில்லை. ஏனென்றால், இந்தியப் பார்ப்பன அரசு, தமிழீழம் மலர்ந்து விட்டால் தமிழ்நாட்டின் தேசிய இன மீட்சி மேலோங்கி விடுமே என்பதால், தமிழ்நாட்டின் தேசிய இன உணர்வை/விடுதலையை ஒடுக்குவதற்காக தமிழீழத்தை அதன் கருவிலேயே கொல்லத் திட்டமிட்டது. அதனால் தான் ஈழத்தில் சகோதர யுத்தத்தை முன்னின்று நடத்தியது.
ஆனால் அந்தப் போரில் தமிழீழமே இலக்கு என்று வலுவோடு முண்டி முனைந்து தனித்து எழுந்த விடுதலைப் புலிகளை இந்திய அரசு குறி வைத்தது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மறுத்த புலிகளை மிரட்டியது; அழிக்கத் துணிந்தது. அமைதிப்படை இலங்கை சென்றது. தமிழினத்தைப் படுகொலை செய்தது. ராஜீவ் படுகொலையால் கையைச் சுட்டுக்கொண்ட இந்தியா உலகமயமாக்கலைப் பயன்படுத்தி, பிராந்திய பொருளாதார கூட்டிணைப்பான ‘சார்க்’கின் மூலம் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இலங்கையோடு ஏற்பாடு செய்ததன் நோக்கம், இலாப வெறி மட்டுமல்ல, தெற்காசிய பிராந்திய ஆதிக்கத்திற்கு அத்தகு பொருளாதார உறவு வழிவகை செய்யும் என்பதாலுமே. தடையில்லா வர்த்தக உடன்பாட்டிற்குப் பின் இன்று இலங்கையை இந்தியா தனது நாட்டிற்குள்ளான ஒரு பிரதேசமாகவே மாற்றிவிட்டது. எனவே, விடுதலைப் புலிகளின் தமிழீழப் போராட்டத்தை அதன் ஒவ்வொரு நிலையிலும் இந்திய அரசு தனது உளவு நிறுவனம், இராணுவம், போன்ற கருவிகளின் வாயிலாக பலவகைகளிலும் நசுக்குகிறது, நசுக்கும். இலங்கையின் மீதான ஆதிக்கத்திற்காக, தானே வளர்த்துவிட்ட தமிழ்ச்சக்திகளை சிங்களப் பேரின வாதம் கொண்டே அழித்துக்கொண்டிருப்பதும் இந்திய அரசு தான். இலங்கை தனது அனுபவத்தில் தன்னோடு இந்தியா முன்பு நடந்துகொண்ட விதங்களை எண்ணி அவநம்பிக்கை கொண்டிருப்பது இந்தியாவிற்கு நன்றாகத் தெரியும்.
அதைப் பயன்படுத்தி சீனாவும், பாகிஸ்தானும் எவ்வகையிலும் இலங்கையை தளமாகப் பயன்படுத்திவிட இலங்கை அனுமதித்து விடக்கூடாது என்பதும் இந்தியாவின் தெற்காசிய பிராந்திய ஆதிக்கக் கொள்கையின் உள்ளடக்கமே. அதற்காகவும் சிங்களப் பேரின வாதத்தின் இனப் படுகொலையை முன்னின்று நடத்திக்கொண்டு இருக்கிறது இந்தியா. ஆனால், சிங்கள அரசோ இந்தியாவின் ஆதிக்க வெறியை தனது முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் புரிந்துகொண்டு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் இராணுவ உறவுகளை இந்தியாவை அச்சுறுத்துவதற்காகவே பேணிக்கொண்டிருக் கின்றது. இத்தகு சூழலில், இலங்கையை பலவீனப்படுத்த வேண்டிய சூழலிலும், இந்தியா பங்களாதேசப் பாணியைப் பயன்படுத்தாததன் காரணம், இந்தியாவில் தமிழ்த் தேசீய இன விடுதலை உயிர் பெற்று விடக்கூடாது என்ற பார்ப்பனப் பாசிசம் என்ற காரணம் முன்னிற்கிறது.

இத்தகு சூழலில் தமிழீழத்திற்கான போரும் புரட்சியும் இன்னும் பல்லாண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும் அது தமிழ்நாட்டைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. அவ்வகையில் தமிழீழப் போரின் இரண்டாவது அத்தியாயம் தமிழகத்தில் தான் தொடங்கவிருக்கின்றது.

எனவே இந்தியப் பார்ப்பன அரசு தமிழகத்தை கிளர்ந்தெழ விடாமல் செய்ய எல்லா உத்திகளையும் கையாளுகின்றது. ஆம், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது தான் பார்ப்பன சாதி ஏகாதிபத்தியம். நேர் முரணான வரலாற்றுப் பகையது. அது இந்தியா முழுவதுமுள்ள தேசிய இனங்களை ஒடுக்கிக்கொண்டு தான் இருக்கின்றது. இந்தியா என்ற பார்ப்பனக் கட்டமைப்பு, தேசிய இனங்களின் விடுதலையால் அழிக்கப்பட்டுவிடும் என்பதால் விடுதலைக்குரலை ஒடுக்க வேண்டும் என்பது இந்தியப் பார்ப்பன அரசின் நிரந்தரத் தாரக மந்திரம். (இந்தியப் பார்ப்பனக் கட்டமைப்பு உயிரோடு இருக்கும் வரையிலும், அதில் தமிழ்நாடு ஓரங்கமாக இருக்கும் வரையிலும் தனித் தமிழீழம் சாத்தியம் இல்லை)

தடையில்லா வர்த்தக உடன்பாட்டிற்குப் பின் இந்தியத் தரகு முதலாளிகளின் கொள்ளை இலாப வெறிக்கு இலங்கையின் பொருளாதாரம் இரையாக்கப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுவிட்டது. இது பார்ப்பன பனியா கூட்டுறவே. இது தான் இந்திய நாட்டிற்குள்ளும் கோலோச்சுகிறது, அதன் பிம்பமே வெளியுறவுக்கொள்கையிலும் எதிரொலிக்கின்றது. இலாப வெறியும் இப்போது இன்னொரு காரணமாகிவிட்டது. ஆனால் நிரந்தரக் காரணங்களான தெற்காசிய பிராந்திய ஆதிக்கமும், அது நிருவப்படுவதற்குத் தடையாகவும், தமிழ்த் தேசிய உணர்வு தமிழகத்தில் வளர்ந்துவிட காரணமாகவும் இருக்கும் தமிழீழ விடுதலைப் போரை ஒடுக்குவதும் இலங்கையின் மீதான இந்திய இலாப வெறிக்கு முன் 20 ஆண்டுகள் பழையன.

எனவே முதல் எதிரி, தேசிய இனங்களுக்கு எதிரான பார்ப்பன ஆதிக்க வெறி, தெற்காசிய பிராந்தியத்தின் மீதான இந்திய அரசின் ஆதிக்க வெறி அடுத்ததே இலங்கையின் மீதான இலாப வெறி. ஆயினும் இவை மூன்றையும் வீழ்த்தப்பட வேண்டும்.

வர்க்க ரீதியான ஒருங்கிணைப்பு இந்தியாவில் ஒரு எல்லையோடு நின்றுவிடுவதால், தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான புரட்சி என்ற ஆயுதம் தான் நாம் ஏந்தவேண்டியது. இதனை அகில இந்திய அளவில் செய்ய முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி. எனவே வாய்ப்பு இருக்கும் தேசிய இனங்கள் தமது இன விடுதலைக்கான போரைத் துவங்க வேண்டியது நிகழ்காலக் கடமை. பின், தொடரும் இன விடுதலைகளை தம்மோடு இணைத்துக்கொள்ள வேண்டும். இது தனித்தமிழீழ விடுதலைக்கான புரட்சி மட்டும் என்று கொள்ள வேண்டியதில்லை. இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் விடுதலை பெறவதற்கும் பார்ப்பன ஆதிக்கத்தை அழித்தேயாக வேண்டும். பார்ப்பன ஆதிக்கம் என்பது அகில இந்திய வடிவம்; இந்தியாவே ஒரு பார்ப்பனக் கட்டமைப்பு. பார்ப்பன ஆதிக்கத்தை இந்தியா என்ற முழுவடிவத்திற்குள் வீழ்த்தமுடியாது. எனவே தமிழா இன உணர்வு கொள். தேசிய இனங்களே விழித்துக்கொள்ளுங்கள்; போராடுங்கள்; விடுதலை பெறுங்கள். இந்தியாவைப் பொருத்தவரையில் புரட்சிக்கான சரியான வழி இதுவாகத்தான் இருக்க முடியும்.

மேலும், கம்யூனிச வழியிலான புரட்சிகர சக்திகள், ஈழ விடுதலைக்குப் பின்னிருக்கும் இந்தியப் பார்ப்பன பாசிசத்தை முன்னிறுத்தத் தவறக்கூடாது. இலங்கையில் பனியாக்களின் பெருவாரியான கூட்டுக்கொள்ளை (டாடா, அம்பானி, பிர்லா) என்பது 2000-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய நிகழ்வே. இந்த ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வர்க்கத்தை முன்னிறுத்த வேண்டும் என்ற வர்க்க முனைப்பில் (ஆர்வக் கோளாறு) அதற்கு முன்பிருந்தே அடிநாதமாக விளங்கும் பார்ப்பன பாசிசத்தையும், திராவிட - ஆரிய போராட்டத்தின் மறுபதிப்பாக உலாவரும் ஈழத்தமிழர் படுகொலையின் தெளிவான அரசியலையும் வெட்டவெளிச்சமிட தவறக்கூடாது.

பொதுவாக, கம்யூனிசம் தேசிய இன விடுதலைக்கான ஆதரவு சக்தியே. ஆனால் இந்திய ஓட்டுப் பொறுக்கி கம்யூனிஸ்டுகள் அதனை மறுப்பதற்குக் காரணம் அதில் மலிந்திருக்கும் பார்ப்பனப் பாசிசமே. மாவோ கண்ட சீனமும் இன்று முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக செயல்படுகிறது என்பதை எல்லோரும் உணர்ந்து சீனாவின் போலி கம்யூனிச முகத்திரையை கிழித்து எறிய வேண்டும். இந்தச் செய்தியையும் படியுங்கள் சீனாவைப் புரிந்துகொள்வீர்கள்.

தி இந்து நாளிதழ், மார்ச்சு 23, 2009 பக்கம்16
“China had opposed a motion in the United Nations Security Council for a discussion on the humanitarian crisis triggered by the war in the north on the ground that it was an internal matter of the island nation and the military operations had no effect on international peace and security; informed the UNSC not to interfere in Srilankan’s internal affairs; the UNSC was compelled to withdraw the motion on two occasions due to stern opposition from China.”

26.01.2009 ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க தோழர் மருதையன் ‘இந்தப் பிரச்சனைக்குப் பின் பார்ப்பான அதிகாரிகள் இருக்கிறான் என்று நெடுமாறன் சொல்வது எல்லாம் பொய்’ என்று குறிப்பிட்டிருப்பது தவறான பார்வை. அவர் சொல்வது போல இந்தியத் தரகு முதலாளிகளின் செல்வாக்கு என்பது இலங்கை இனப்பிரச்சனையைப் பொருத்தவரையில் 2000-ஆம் ஆண்டின் சமீபத்தியது. ஆனால் பார்ப்பன, தமிழினத்திற்கு விரோதமான ஆரிய இன எதிரிகள் இந்தியாவெங்கும், குறிப்பாக சென்னையிலும், டெல்லியிலும், பல்வேறு மட்டங்களில் உயர் அதிகாரிகளாய், அரசியல்வாதிகளாய், நீதிமான்களாய், ஊடக மன்னர்களாய் அதற்கும் 25 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தே சதிவலையைப் பின்னிக்கொண்டிருக்கின்றனர் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் தேசிய இன ஒடுக்கலை எதிர்த்துப் பேசும் அதே வேளையில் அதை முன்னிலைப்படுத்திப் போராடத் தவறிவிட்டார். சோ, இந்து ராம், சுப்பிரமணியசுவாமி, ஜெயலலிதாவெல்லாம் இந்தப் பிரசச்சனையில் தமிழீத்தை எதிர்க்கிறார்கள் என்ற உண்மையை முன் வைத்த தோழர் மருதையன் அவர்கள் அவ்வாறு செய்வதற்குக் காரணமான பார்ப்பன பாசிசத்தையும், அது ஒடுக்கும் தேசிய இன ஒடுக்கலையும் வரலாற்றுப் பார்வையில் இந்தப் பிரச்சனையில் தலையாய முதன்மை அரசியலாக முன்னிறுத்தாமல், இந்தியாவின் வர்க்க நலனை முதல்நிலைப் படுத்துவது ம.க.இ.க.வின் தவறான அரசியலே. மேலும் அதன் எதிர்விளைவாக தேசிய இன விடுதலையை முன்னிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யத் தவறிவிட்டார்.

19.03.2009 ம.க.இ.க திருச்சி கூட்டத்தில், தோழர் காளியப்பன், இலங்கை இனப்பிரச்சனையினை தொகுத்துச் சொல்லும் போது இலங்கை மண்ணில் சகோதர யுத்தத்தை இந்திய உளவுத்துறைதான் ஏவிவிட்டது என்று கூறினார். ஆனால் அவ்வாறு இலங்கைப் போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்த அதே இந்திய அரசு ஏன் அந்த சகோதர யுத்தத்தை ஏவிவிட்டது என்று கூறவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால், ஆயுதமும் பயிற்சியும் கொடுப்பது இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சனையை உண்டுபண்ணி அதில் அரசியல் ஆதாயம் தேட, ஆனால் அதே நேரத்தில் அந்த ஆயுதக் குழுக்களிடையே சகோதர யுத்தத்தை ஏவிவிட்டதற்குக் காரணம், அவர்கள் ஒன்றிணைந்து தனித் தமிழீழத்திற்கான பெரிய சக்தியாக உருவாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் எனபதை தோழர் காளிப்பன் கவனிக்கத் தவறிவிட்டார். (ஏன் தமிழீழம் உருவாகி விடக்கூடாது? அப்படி தமிழீழம் உருவானால் தமிழகத்தில் தேசிய இன விடுதலை என்ற அசுரன் தலைதூக்கிவிடுவான் என்று பார்ப்பன தேவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த அரசியலை ம.க.இ.க முன்வைக்கத் தவறிவிட்டது. எனவே பிரச்சனை தேசிய இன ஒடுக்கல் தான். அதைத் தான் முன்னிறுத்த வேண்டும் என்ற அரசியலை ம.க.இ.க ஏன் தவறவிட்டது? அதை விட்டுவிட்டு டாடா, அம்பானி கதை காலத்தால் பிந்தியது. மார்க்சியன் வரலாற்று இயங்கியல் பார்வையில் அது கூடுதலான ஒரு காரணிதானே ஒழிய முன்னிலைக் காரணியல்ல.) அதன் தொடர்ச்சியே ராஜீவ்.-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஆதிக்கத் திமிறோடு கையெடுத்த ராஜீவ் கையெழுத்து போட்டது. அதற்குப் பணிய மறுத்த புலிகளின் தலைவரை கொல்லப் பணித்தது, வலிமையாக உருவெடுத்துவிட்ட புலிகள் தமிழீழத்தை எட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் தான். தமிழீழம் உருவாவதால் இலங்கை பலவீனப் பட்டுவிடும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே. ஆனால் அவ்வாறு ரீதியான பலவீனத்தை இலங்கையின் மீது திணிக்கும் சக்தியிருந்தும் அதைச் செய்யாது அதைத் தடுத்து, அப்போராட்டத்தை வீழ்த்துவது என்பது தமிழ்த் தேசிய இன விடுதலையின் விரோதமான ஆரிய பார்ப்பன பாசிசமே. அதற்குப் பின்னிற்பவர்கள் அத்தகைய பார்ப்பன அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஊடகங்களுமே.

எனவே இந்தப் பிரச்சனையைப் பொருத்தவரையில் தேசிய இன விடுதலை தான் முன்னிறுத்தப்படவேண்டிய அரசியல். அதற்கு எதிரியாக நிற்கும் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவதுதான் நமது குரலாக இருக்க வேண்டும். டாடா, அம்பானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகளின் இலாபவெறிக்குப் பின்னிற்கும் இந்தியாவின் வர்க்கப் பாசம் என்பது இரண்டாந்தரமான ஒன்றே. அதனை இப்பிரச்சனையின் வரலாற்று ரீதியான இயங்கியல் ஆய்வில் நாம் தெளிவாக நிரூபித்துள்ளோம். தரகு முதலாளிகளின் மீதான இந்திய அரசின் வர்க்கப் பாசத்தை முன்னிறுத்தி பார்ப்பன பாசிசத்தைப் பின்னுக்குத் தள்ளுவது என்பது ம.க.இ.க.வின் தவறான அணுகுமுறை. இந்தியாவின் வர்க்கப் பாசத்தை எதிர்க்கின்ற அதேவேளையில் நாம் ஈழப்பிரச்சனையில் தேசிய இன ஒடுக்கலுக்குப் பின்னிற்கும் பார்ப்பன பாசிசத்தையும் அதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இந்திய அரசையும் தான் எதிரியாக முன்னிறுத்துகிறோம். ஈழப்பிரச்சனையில் எதிரி இந்தியா தான். ஆனால் தேசிய இனங்களை ஒடுக்கும் பார்ப்பன பாசிச இந்தியா. இந்த அரசியல் தான் முன்னிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால் வர்க்க உணர்வில் தமிழினம் எழவில்லை. இச்சமயத்தில் புரட்சிக்கான வாய்ப்பை வர்க்கத்தின் பெயரைச் சொல்லித் தள்ளிப்போடுவது என்பதும், தேசிய இன விடுதலையின் அவசியத்தைப் பின்னுக்குத் தள்ளுவது என்பதும் தவறு. எனவே நமது குரல் தமிழா இன உணர்வுகொள், தேசிய இனங்களே விழித்துக் கொள்ளுங்கள், விடுதலைக்காகப் போராடுங்கள். இந்தியாவைப் பொருத்தவரையில் புரட்சிக்கான சரியான வழி இதுவாகத்தான் இருக்க முடியும். புரட்சிக்கான தருணத்தைத் தவறவிடாதீர்கள்

இதுவே எனது புரிதல். “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”.

1 comment:

Unknown said...

அன்பரே,
சிந்தனை, நுணுக்கம், அறிவு, உண்மை, ஊக்கம், கடமை யாவும் நிறைந்த பதிவு தந்ததற்கு நன்றி.
திறமைக்குப் பாராட்டு.
பணிதொடரட்டும்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
மார்ச்சு 28, 2009

Post a Comment