Wednesday, June 17, 2009

ஈழப்போரின் உயரிய தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் ம.க.இ.கவின் பார்ப்பனஇரட்டை நாக்கும், வெளுத்துப் போன மூக்கும் - 1

ஈழப்போர்-2009, தமிழ்த் தேசிய இன விடுதலையின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஒரு பெரும் பின்னடைவு. தமிழீழ மண்ணை சுடுகாடாக்கிவிட்ட சிங்களப் பேரினவாத போர்வெறி ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் ஒரு சவாலை விதைத்திருக்கின்றது. உண்மையில், இயக்குநர் சீமான் சொன்னது போல, ஒவ்வொரு மானமுள்ள தமிழனையும் விடுதலைப்புலியாக்கிவிட்டது இந்த ஈழப்போர். தமிழீழத்தின், ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒரு ஒப்பற்ற போர்ச்சின்னம், போர்முழக்கம் பிரபாகரன். தமிழ் மண் கண்ட போர் வரலாற்றில் பிரபாகரன் சிகரம் தொட்ட நாயகன். உண்மை, வெறும் புகழ்ச்சியன்று.

அவர் ஆற்றிய போர் வெற்றிகள், அவர் விரிவுபடுத்திய படை அமைப்பு விண்ணையும் மண்ணையும் கடலையும் பரவி நின்றது. அது அவருக்கு ஒரு மாவீரன் என்ற புகழைத் தந்தது. நாயகன் ஆவதற்காக யாரும் போராடுவதில்லை. போராட்டங்கள் தான் ஒரு போராளியை நாயகனாக உயர்த்துகின்றன. மாவீரர்கள் செய்யப்படுவதில்லை, உருவாகிறார்கள். புலிகளின் அரசாட்சி முறை நியாயம் படைத்தாக, ஒழுங்கும் அறமும் கொண்டதாக இருந்திருக்கின்றது. தற்போது நடந்த உச்சக்கட்ட போரில் இலட்சக்கணக்கான மக்கள் புலிகளைச் சுற்றிக்கொண்டு கேடயமாக நின்றது அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் தழுவிய அரசியலாக்கியிருப் பதற்கான ஆதாரம்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றிய சரியான புரிதல் எல்லோருக்கும் அவசியம். புலிகள் ஜனநாயக சக்திகளை அழித்துவிட்டார்கள் என்று கதையளப்பதில் எந்தப் பொருளும் இல்லை. இந்திய ‘ரா’ உளவுத்துறை மற்றும் இராணுவத்தின் இடைவிடாத கடுமையான தலையீட்டால் போராளிக் குழுக்களுக்குள்ளேயே பிரிவினை ஏற்படுத்தப்பட்டது; ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் அபாயம் உண்டானது; அந்தச் சூழலில், களத்தில் நின்று போராடக்கூடிய ஒரு ஆயுதக் குழு எடுக்கும் முடிவை வெட்டியாக நாற்காலி மேசை போட்டு கருத்துக் கூறவிட முடியாது. ஏனெனில் அப்படிப்பட்ட போர்க்குழுக்களை வளர்த்தெடுத்ததே ‘ரா’வும் இந்திய இராணுவமும் தான். எனில் அவற்றின் ஆதிக்கம் அத்தகு குழுக்களுக்குள் எந்த அளவிற்கு ஊடுருவியிருக்கும் என்பதை யாரும் அவ்வளவு எளிதில் கற்பனை செய்துபார்க்க முடியாது. நரம்பும் சதையுமாக இருந்த மாத்தையாவே விலைபோன துரோகக் கதையது. ஒரே குரல் ஒலிக்கவேண்டும் என்பதும், அதிகாரம் குவிக்கப்படவேண்டும் என்பதும் இத்தகு சூழலில் களத்தில் நின்று போராடக்கூடிய ஒரு போர்க்குழுவின் அவசியம். போட்டி நிலவும் பல்வேறு போர்குழுக்களுக்குள் ஒரு திறமையான போர்க்குழு முன்னெழ பல போர்த் தந்திரங்களும், செயல் தந்திரங்களும் செய்யவேண்டியிருக்கும். புலிகள் மாற்று ஜனநாயக சக்திகள் இயங்குவதற்கான ஒரு வெளியை ஏற்படுத்தவில்லை என்பதும் தவறு.

அன்றைய சூழலில் தமிழர்களின் ஒரே குரலும், இராணுவரீதியான வெற்றியும் தேவைப்பட்டது. தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் எல்லோரும் வெவ்வேறு போர்க்குழுக்களிலும், மாற்று ஜனநாயக் சக்திகளாக இருந்தவர்களும் தான். புலிகளின் ஆதரவு சக்திகளை அவர்கள் என்றுமே பாதுகாத்திருந் திருக்கிறார்கள். மாற்று ஜனநாயக் சக்தி என்ற போர்வையில் தமிழீழத்தில் குழப்பங்களை உருவாக்க நினைப்பவர்களையும், தமிழர்களை ஒரே குடையின் கீழ் சேர்க்கவிடாமல் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்களையும் தான் புலிகள் அழித்திருக்கிறார்கள். அது களத்தின் தேவை. வசதியாக ஒரு அறையில் உட்கார்ந்துகொண்டு பேனா பேப்பர் கிடைக்கிறது என்பதற்காக என்ன வசை வேண்டுமானாலும் பாடலாம் என்றால் ஸ்டாலினும் ஒரு மக்களினப் படுகொலைக்காரர் தான்; தனது சகாக்களையே உளவுத்துறையை ஏவி சுட்டுக்கொன்ற ஸ்டாலினும் ஒரு சர்வாதிகாரி. சோவியத் ரசியாவிற்குப் பயணம் சென்ற பெரியார் டிராட்ஸ்கியவாதிகளை சந்திக்க முயன்ற போது ஸ்டாலின் பெரியாரை நாட்டைவிட்டு உடனே வெளியேற்றினார். ஸ்டாலின் ஒரு ஜனநாயகவாதியாம்! ஸ்டாலின் எந்த வகையில் ஜனநாயகவாதி என்று கொக்கரிக்கிறார்களோ அதே அளவுகோல் கொண்டுதான் புலிகளையும் அளந்து பார்க்கவேண்டும்.

‘ஸ்டாலின் ஒரு சகாப்தம்’ என்ற குறுந்தகடில் ம.க.இ.க, ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி பூஜை செய்யவில்லை என்ற ஒரு குறையைத் தவிர எல்லா வகையிலும் தனிநபர் வழிபாடு செய்கின்றது. என்னப்பா, உங்கள் கணக்குப்படி ஸ்டாலினுக்கு ஒரு நியாயம், பிரபாகரனுக்கு ஒரு நியாயமா?

அந்தக் குறுந்தகட்டில், ஸ்டாலின் மீது சுமத்தப்பட்ட எல்லா குற்றங்களையும், ஜனநாயகப்படி, கூறி அதை விளக்கி மறுப்பு சொல்லியிருந்தால் அது ஜனநாயக விமர்சனம். அப்படி எதுவுமே அதில் இல்லையே. அவை எல்லா வற்றையும் உங்கள் பார்வையாளர்களிடமிருந்தும், சக தோழர்களிடமிருந்தும் மறைத்துவிட்டீர்கள்.

முன்பொரு முறை அருந்ததிராய் எழுதிய கட்டுரையின் மொழி பெயர்ப்பை முழுவதுமாக வெளியிடாமல் ஸ்டாலின் பற்றிய விமர்சனங்களுக்கு சென்சார் விதித்த ம.க.இ.கவின் ஜனநாயக யோக்கியதை எல்லோருக்கும் தெரிந்ததே. புதிய ஜனநாயகமாம் அது. ஏனிந்த இரட்டை நாக்கு?

ஸ்டாலின் தன் மக்களையே, ‘லேபர் கேம்புகளில்’ போட்டு சித்திரவதை செய்து மில்லியன் கணக்கில் கொன்றார். ஆனால், பிரபாகரன் அப்படியெதுவும் செய்யவில்லையே. தனது மக்களுக்காக தங்களைக் களப்பலியாக்கிக்கொண்டு சயனைடு குப்பிகளோடு திரிபவர்கள் அல்லவா புலிகள். தனது சொந்த மகனையே களப்பலி கொடுத்த வீரம் யாருக்கு இருக்கிறது? முதலாளித்துவ சக்திகள் ஸ்டாலின் இருக்கும்போதே எல்லா விமர்சனங்களும் செய்தன, இறந்த பின்னும் சேற்றை வாரியிறைத்தன. இன்று ம.க.இ.க, புலிகள் போராடிக் கொண்டிருக்கும் போதும் இப்பொழுது தோல்வியை சந்தித்தவுடனும் இதே விமர்சனம் செய்கின்றனது. ம.க.இ.கவிற்கும் முதலாளித்துவ சக்திகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஒற்றுமை என்னவென்றால், காழ்ப்புணர்வு, வெறுப்பு. இது தமிழின தேசிய எழுச்சியின் மீதான வெறுப்பு. பூணூலிஸ்டுகள் புலிகள் மீது சேற்றை வாரியிறைப்பதில் எந்த வியப்பும் இல்லையே. இங்கே என்ன விசேசம் என்றால், ம.க.இ.க தன்னை பூணூலிஸ்டு என்று அடையாளம் காட்டியிருக்கிறது. இதனை பல்வேறு கேள்விகள், கட்டுரைகள் மூலம் ‘கருந்திணை’ ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்பொழுதும் அதன் இரட்டை நாக்கை அம்பலப்படுத்தியுள்ளது. புலிகளின் கொடியை சிங்களர்கள் அவமானப்படுத்தும் புகைப்படத்தைப் போட்டு புதிய ஜனநாயகமும் பூரிப்பு அடைகின்றது. பிரபாகரன் தனது சகாக்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் போட்டு, தனிநபர் வழிபாடு, சந்தர்ப்பவாதம் என்றும் அர்ச்சனை செய்திருக்கின்றது. இதில் எந்த உண்மையும் இல்லை. நான்குபேர் இருக்கும் ஒரு புகைப்படத்தை அச்சிட்டு என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றால், யாரும் புகைப்படமே எடுத்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். சரி, அப்படி விமர்சிப்பதானால், நாமும் விமர்சிப்போம், சர்ச்சிலோடும், உட்ரோ வில்சனோடும், ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் பற்றி; அப்பட்டமான சமரசவாத சந்தர்ப்பவாத மோசடி என்று; உலக நாடுகளை கூட்டுக்கொள்ளையடிக்க போடப்பட்ட ஊழல் கூட்டணி என்று. இது முழுக்க முழுக்க உண்மை. கோவப்படாதீக மக்கா! கிழக்கு ஜெர்மனி மற்றும் பெர்லின் சுவர்பற்றி அய்ரோப்பிய வரலாற்றைப் படியுங்கள். வெறுமனே, ம.க.இ.க காட்டும் சென்சார் விசயங்களை மட்டும் பார்த்துப் படித்து ஏமாந்துவிட வேண்டாம். தயவு செய்து எல்லா நூல்களையும் கற்று, நீங்கள் ஒரு முடிவிற்கு வாருங்கள்.

பேனாவும் பேப்பரும் உங்க கிட்ட மட்டும் தான் இருக்கின்றதா? இவர்கள் தோழர் லெனினை அதிகப்படி புறக்கணிப்பார்கள். ஸ்டாலினை மட்டுமே முன்னிறுத்துவார்கள். தயவு செய்து லெனினின் நூல்களை ஆழப்படியுங்கள். உண்மை யில் லெனின் ஒரு நல்ல சித்தாந்தவாதி. அவரிடமிருந்து நிறைய தெரிந்துகொள்ள முடியும். தேசிய இனச் சிக்கல்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். நேரடியாக லெனினைப் படியுங்கள். ம.க.இ.க கண்ணாடியில்லாமல். அதுவும், லெனின் சோவியத் ரசியாவை உருவாக்கிய பின் அவர் அதில் கண்ட நடைமுறை சிக்கல்களை விவரித்து எழுதியுள்ளார். அந்தக் காலகட்ட நூல்களை ஆழப்படியுங்கள். ஒரு எடுத்துக்காட்டு, அதை அப்படியே ஆங்கில மூல வடிவில் தருகிறேன்.

Lenin, 1921a:521, 530: It is to be imagined that under such conditions Russia can pass immediately to socialism?. . . We went too far on the path of the nationalization of commerce and industry, and in the suppression of local trade. Was it a blunder? Yes, without question ௪. Capitalism will remain inevitable so long as we are unable to effect a direct transition from small industry to socialism. An attempt to completely suppress private trade ௲ which amounts to capitalism ௲ would be an absurdity because such a policy is economically unfeasible, and it would be suicide because a party which attempted it would be doomed to failure. It is not the growth of the petty bourgeoisie that has to be feared but the prolongation of famine, of misery, of the shortage of food.

தோழர் லெனின் தன்னைத் தானே கேள்விகேட்டுக்கொண்டு சுய விமர்சனம் செய்துகொண்ட மிகச்சிறந்த பகுத்தறிவுவாதி. தனது தவறுகளை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு, ஒரு சரியான இலக்கைக் காண முயற்சி செய்வார். எனவே தான் சொல்கிறேன், தோழர் லெனினின் ஒரு சரியான இயங்கியல்வாதி. இயங்கியல் தன்மையில் சமூகத்தை ஆராய்ந்தவர். எனவே தான் முதலாளித்துவ சமூகத் தேவையை அவர் விமர்சனக் கண்ணோட்டத்தோடு ஏற்றுக்கொள்கின்றார். படிநிலைகளில் உரிய மாறுதல்களுக்கு உட்படாத திடீர் சமூக உருமாற்றத்தால் ஏற்படக்கூடிய இயங்கியல் சிக்கல்களை தனக்கேயுரிய சித்தாந்தக் கூர்மையோடு விளக்குகிறார். ஆனால் அவை எல்லாவற்றையும் மறுத்து, சர்வாதிகாரத்தால் எதையும் எப்படியும் மாற்றிவிடலாம், செய்துவிடலாம் என்பது இயக்கவியல் மறுப்பு வாதம். அதன் விளைவுகள் தான் ‘லேபர் கேம்பு’கள். அதைத்தான் ஸ்டாலின் செய்தார். ஸ்டாலின் செய்தது குதிரைச் சவாரி. அதுவும், அதிகாரவர்க்க குதிரைச் சவாரி.

விடுதலைப்புலிகளையும் விமர்சியுங்கள். யாரும் விமர்சனத் திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஆனால் நமது விமர்சனம் ஒரே அளவுகோலு டனான வரலாற்று அறிவியல் பார்வையுடனானதாக இருக்க வேண்டும். ஈழத்திற்காக புலிகள் சிந்திய இரத்தம், தியாகம் அளப்பரியது. புலிகள் தனி ஈழத்தின் பெரும் பகுதியை வென்று எத்தனையோ காலம் ஆகின்றது. வென்றது மட்டுமன்றி அவர்கள் தனி ஈழத்திற்கான அரசு நடத்தியவர்கள். சர்வதேச அரசியல் சதியில் இந்தியாவும் சீனாவும் ஈழத்திற்கான அங்கீகாரத்தை மறுத்ததோடு மட்டுமல்லாமல் அதை வீழ்த்துவதற்கான இனப்படுகொலையையும் ஏவியுள்ளனர். இது வெறும் இலங்கையின் வேலை மட்டுமல்ல. இலங்கையின் பேரினவாத வெறி என்பது ஒரு அம்பு மட்டும்தான்; அம்பிலும் பாதி அம்பு. ஏனென்றால் ஏவியவர்களும், இலங்கைக்குள்ளேயே யிருந்து போரை நடத்தியவர்களும் இந்தியாவும் சீனாவும் தான். இந்த இரண்டு அணு ஆயுத வல்லரசுகளோடு எதிர்நின்று போரிடுவது என்பது ஆகக்கடுமையான சவால். ஆனால், நேர்மையானவனோடு, எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், நாம் எதிர்நின்று போரிடலாம். சதிகாரர்களுக்கு எதிராக அதுவும் இப்பிராந்தியத்தின் கடுமையான இரு வல்லரசுகளுக்கு எதிராக என்பது மிகக் கடுமையான போராட்டமே.

திட்டமிட்ட சதிவேலைகளை பன்னெடுங்காலமாக இந்திய உளவுத்துறை செய்துவருகிறது. அடிமுதற்கொண்டு ஊடுருவியி ருக்கும் அவர்களின் சதிவேலைகளால் புலிகள் எத்தனையோ துரோகங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதையும் மீறி ஒரு தனிப்பட்ட கட்டுக்கோப்பான தனிப்படையும், உளவுப் பிரிவும் கொண்ட, முப்படை ஆயுதங்களையும் சேர்க்க முடிந்திருக்கிற தென்றால் மிகவும் ஆழமான மக்கள் அரசியல் இல்லாமல் முடியாது. கடைசிவரை இலட்சக்கணக்கான மக்கள் புலிகளுக்கு அரணாக இருந்த நிகழ்வு சாதரணமானதொன்றல்ல. அது உயரிய புரட்சிகர ஜனநாயக அரசியல். அரணாக நின்ற மக்கள் தங்கள் இன்னுயிரையும் இனியவற்றையும் இழந்து நின்றிருப்பது என்பது உலகில் எங்குமே கண்டிராத மக்கள் அரசியல். அப்படிப்பட்ட இயக்கத்தையும், அதன் தலைமையையும் ஏதோ கிள்ளுக் கீரையை கிள்ளி எரிவதுபோல் கொச்சைப்படுத்தக் கூடாது, முடியாது. அந்தத் தியாகங்களையும் ஈகங்களையும் மறைத்துவிட்டு கொச்சைப்படுத்துவதே நோக்கமாக செயல்படும் அமைப்புகளை நாம் முழுமையாக சந்தேகிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பார்ப்பன எதிரிகள் என்பதையும் அடையாளம் கண்டு கொள்கிறோம். களத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்திருக்கும் என்பதை அப்போராட்டத்தின் பின்னல் வலை சிக்கல்களை ஆராயும்போதுதான் புரிந்துகொள்ள முடியும்.

தமிழீழ விடுதலை என்பது பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கிய போராட்டம்.

1. சிங்களப் பேரினவாத வெறி
2. புலிகளின் மரவுவழி இராணுவ தளவாட விரிவாக்கமும், விமானப் படைபலமும், அதை அடக்க முடியாத பலவீனமான இலங்கை அரசு என்ற சூழலில் புலிகள் ஏற்படுத்திய பிராந்திய பலப்பரிட்சை
3. இந்திய பார்ப்பன சதிகார பாசிச கும்பலின் தமிழ் தேசிய இன ஒடுக்கல்
4. ராஜீவ் கொலைக்காக பழிதீர்க்கத் துடிக்கும் சோனியா காந்தியின் குடும்பமும் அவர்களை முன்னிலைப்படுத்திய காங்கிரசுக் கட்சியும்
5. பூலோக அரசியல்
6. செஞ்சீனத்தின் சந்தர்ப்பவாத ‘சித்தாந்த’ சமரசவாதம்
7. 9/11க்கும் பிந்தைய சர்வதேச அரசியல்

புலிகளின் மரபுவழி இராணுவ தளவாடப் பெருக்கமும், பலநூறு கிலோமீட்டர்கள் சென்று குண்டுவீசும் விமானப்படையும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இலங்கையின் இராணுவ பலத்தை நிகர்செய்வதோடு மட்டுமன்றி சவால்விடும் அளவிற்கு ஒரு தனி நாட்டிற்கான அனைத்து இராணுவத்துறையிலும் வளர்ச்சிபெற்ற அமைப்பாக புலிகள் தங்கள் படைபலத்தை விரிவுபடுத்தியிருந்தனர். இது இந்திய இராணுவத்துறையிலும், உளவுத்துறையிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தாங்கள் ஒடுக்க நினைக்கும் ஒரு தேசிய இனம் இப்படிப்பட்ட பலத்தோடு உருவாவது அவர்களுக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தது. புலிகளையும் தனி ஈழ அரசையும் பூண்டோடு ஒழிப்பதன் மூலமே, புலிகள் ஏற்படுத்திய இந்தப் பிராந்திய பலப்பரிட்சையை சுழிநிலைக்குக் கொண்டுவர முடியுமென்று நம்பியது. சோனியாவின் தலைமையிலான காங்கிரசு இந்திய அரசை ஆண்டுகொண்டிருக்கும் வேளையில் ராஜீவின் கொலைக்குப் பழிவாங்க வேண்டுமென்ற வெறியும் இணைந்தே இருந்தது. சாதகமாக இனவெறிபிடித்த ஓநாய், இராஜபக்சேயின் ஆட்சியும் இலங்கையில் நடந்தது. எனவேதான் இது தான் தருணம் என்று புலிகளை அழிக்கும் வேலையில் ஈடுபட்டது இந்திய இராணுவமும், உளவுத்துறையும்.

இனிமேல் பிரபாகரனும், புலிகள் என்ற அமைப்பும் இருக்கவே கூடாது என்ற வெறியில் தான் கொடூரமான மக்கள் இனப் படுகொலையை ஏவிவிட்டுள்ளது இந்திய பார்ப்பன அரசும் இலங்கை இனவெறி அரசும். ஈழ மக்களின் ஆதரவும் பலமும் இருக்கப்போய் தானே இப்படி அவர்களால் வளர்ந்திருக்க முடிந்திருக்கிறது என சரியாகவே இந்திய அரசு புரிந்திருக்கின்றது. எனவே தான் அந்த இனத்தையே வாழத்தகுதியற்ற இனமாக மாற்றி, அந்த மக்களையே ஒரு தலைமுறைக்கு ஊனமுற்ற வர்களாக, தங்கள் வாழ்வில் ஏற்பட்ட கொடுமைகளை நினைத்து நினைத்துப் பார்த்துப் பயந்து ஒடுங்கி கூனிக்குறுகி வாழும் அடிமைகளாக மாற்றுவது என்று மாபெரும் சதித்திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள். இனத்தை அழித்தால் தான் புலிகள் என்ற அமைப்பையே வீழ்த்த முடியும் என்ற எதார்த்த சூழலில் இயற்றப்பட்ட திட்டமிது. இது புலிகள் மக்களோடு மக்களாக அரசியல் உணர்வோடு ஈழ விடுதலையைப் பின்னிப்பிணைத்திருப்பதற்கான வலிமையான ஆதாரம்.

ஒரு இனத்தை அழிக்கும் கொடூர ஆயுதங்கள், சர்வதேச இராணுவ முகாமையிட்ட இன அழிப்புப் போர், அழித்தே தீரவேண்டுமென்ற பாசிச வெறி, என்ற எதிர்ப்பை எந்த விடுதலைப் போர்க்குழு சந்தித்திருக்கிறது? நேபாளில், மக்கள் போராடும் போது இந்தியா, நேபாள அரசோடு சேர்ந்து பாஸ்பரஸ் குண்டு வீசியதா? சட்டீஸ்கர், ஒரிசாவில் நக்சலைட்டுகளை அழிக்க பீரங்கிகளும், ஆகாய குண்டுவீச்சுகளும் இந்திய அரசு நடத்தியதா? பாடிஸ்டாவிற்கு எதிரான போரிலும் அப்படிப்பட்ட கொடுமை களை ஃபிடல் காஸ்ட்ரோ சந்திக்கவில்லையே! ரசியப் புரட்சியின் போதும் அப்படிப்பட்ட அடக்குமுறைகளை போல்சுவிட்சுகள் எதிர்கொள்ளவில்லையே!

இவ்வளவு எதிர்ப்பையும் புலிகள் துணிவுடன் சந்தித்திருக்கின்றனர் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சிகர ஜனநாயக அரசியல் இயக்கமே என்பது தெளிவு. இதில் தோல்வி என்பது தோல்வியல்ல. ஒரு பின்னடைவே. இத்தனை மாதங்களாக இந்தப் போரை சந்தித்து எதிர்த்து நின்ற புலிகள் இந்த உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் போர்சக்தி. அதுவும் தமிழின தேசியப் போர்க்குரல்.

இன்னொரு சர்வதேச அரசியல் செய்தியைத் தெரிந்துகொள் ளுங்கள் மாவோயிஸ்டுகளே. நேபாளத்தில் இந்திய இராணுவத்தின் மேற்பார்வை யுடனான அரசை மட்டுமே மாவோயிஸ்டுகளால் ஏற்படுத்த முடியும். இல்லையென்றால், பெரும்பான்மை மக்கள் சக்தியிருந்தும், இப்பொழுது வெளியில் காத்திருப்பதுபோல் தான் மாவோயிஸ்டுகள் காத்திருக்க வேண்டும். நேபாள விடுதலைக்குமே இந்தியப் பார்ப்பனக் கட்டமைப்பு என்ற அரசு வீழ்த்தப்பட வேண்டும். இந்தியாவில் இருக்கும் எல்லா தேசிய இனங்களும் எழுச்சிபெற்று இந்தியக் கட்டமைப்பை வீழ்த்தாமல் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை வீழ்த்த முடியாது. நேபாளைப் பொருத்தவரையில் மாவோயிஸ்டுகள் சீனாவின் உதவி பெற்றிருந்தாலும், இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கம்யூனிச எதிர்ப்பு சதி வலிமையாகவே இருக்கின்றது.

திபெத்தை வலைத்துப்பிடித்த சீனம் நேபாளில் தனது காலை ஊன்ற முயற்சிப்பதை இந்தியா சரியாகவே புரிந்து கொண்டிருக்கின்றது. எனவே நேபாள இராணுவம் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் வரமுடியாத படியான இந்திய ஊடுருவல் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. தனது நாட்டின், தனது இராணுவத்தின் தலைமையை மாற்ற முடியாதபடியான சூழல் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கின்ற மாவோயிஸ்டுகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஒன்றுமில்லை ஒரு பூசாரியை மாற்ற முடியவில்லை. மாவோயிஸ்டுகள் ஒரு அரசியல் கட்சியாக மட்டுமே செயல்படமுடியும் என்ற இந்தச் சூழல் மாறவேண்டுமானால் இந்தியா வீழ்த்தப்பட வேண்டும். இந்தியா வீழ்த்தப்படுவது என்பது பார்ப்பன பனியா பன்னாட்டுக் கூட்டணியினை வீழ்த்துவது. அதை வீழ்த்த இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் சமூக சூழலில் தேசிய இனங்களின் எழுச்சியே. அதனை வளர்க்க வேண்டிய கடமை ஒவ்வொரு புரட்சிகர அமைப்புகளுக்கும் உள்ளது. இந்த யதார்த்தத்தை எல்லோரும் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் துணையோடு தோளோடு தோள்கொடுத்து தேசிய இன விடுதலையை நோக்கி உழைக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான எழுச்சியே விடுதலைப் புலிகளின் எழுச்சி. அது இன்று கொடூரமான வகையில் ஒடுக்கப்பட்டுள்ளது. எனவே புலிகள், ஈழ விடுதலை, இந்தியாவில் அது தூண்டும் தமிழ் தேசிய இன விடுதலை அது தோள் சேர்க்கும் பிற தேசியங்களின் இன விடுதலை என்பது இந்தியக் கட்டமைப்பை வீழ்த்துவது என்ற அரசியலே. இதுதான் சரியான அரசியல். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.

புலிகளின் பின்னடைவில் சேற்றை வாரியிறைக்கும் கூட்டங்கள் பார்ப்பன பாசிசத்திற்கு ஊன்றுகோளாக நிற்கும் துரோகிகள். புலிகளை கொச்சைப்படுத்துவது என்பது இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்களின் விடுதலைக்கு எதிரான செயல். அது இந்தியக் கட்டமைப்பை ஆதரிப்பதும், அதற்குத் துணைசெய்வதுமாகும். அந்த வகையில் நேபாள விடுதலைக்கும் அது எதிரான செயலே. இவையெல்லாம் இயங்கியல் எதார்த்தங்களே. மக்கள் இதனை அடையாளம் கண்டுகொள்வார்கள்.

புலிகளையும் பிரபாகரனையும் மலினப்படுத்தும் ம.க.இ.கவின் நோக்கம் இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. சோவியத்திற்கும் ஸ்டாலினுக்கும் ஒரு அளவுகோல், புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு அளவுகோலா? பெரியார் சொல்வார், ‘பார்ப்பானுக்கு இரட்டை நாக்கு என்று’, மேலும் சொல்வார், ‘அவனுக்கு முன் புத்தியும் இருக்காது, பின் புத்தியும் இருக்காது’ என்று. அதாவது வரலாற்று ரீதியாக எல்லா நிகழ்வுகளையும் இயக்கவியல் நெறியில் சிந்தித்து விமர்சனம் செய்யாது, தங்களுக்கு எதைப் பிடிக்கவில்லையோ, தாங்கள் எதை வீழ்த்தவேண்டுமென்று நினைக்கிறார் களோ அதன் மீது காழ்ப்புணர்ச்சியால் சேற்றையள்ளி வீசுவது; தங்களுக்குப் பிடித்ததை உயர்த்திப்பிடிப்பது, அது ஜனநாயகமற்றதாக இருந்தாலும். அப்போது அதிலிருக்கும் இரட்டை அளவுகோல் வெளிபட்டுவிடும். அதனால் தான் பெரியார் ஒருவர் கூறுகின்ற கருத்துக்களில் உண்மை என்னவென்று அறிய அப்படிப்பட்ட ஒரு சோதனையை செய்து பார்க்கச் சொல்வார். அதில் பார்ப்பான் கட்டாயம் மாட்டிக்கொள்வான். வேண்டுமென்றால், பெரியார் தாசனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ம.க.இ.கவே, நீ ஒரு பார்ப்பன இரட்டை நாக்கு, வெளுத்துப் போச்சு உன் மூக்கு! இப்பொழுது ஆனந்த விகடனோடு கூட்டு சேர்ந்துகொண்டார்கள். திராவிடன் பார்ப்பானை எதிர்ப்பதா? திராவிட அரசியலைக் கொச்சைப்படுத்தும் மருதையனுக்கு ஒரு மேடையமைத்துத் தந்திருக்கிறார்கள். அதில் அவர் பெரியாரைப் பற்றியும் திராவிட அரசியலைப் பற்றியும் மலினப்படுத்திப் பேசியுள்ளார். பெரியார் சாதி ஒழிப்போடு நின்றுவிட்டதாக புழுகுகிறார், மருதையன். பெரியார் தனிநாடு கேட்டு போராடியதையும், அந்தக் கோரிக்கையை முன்வைத்ததையும் வேண்டுமென்றே மறைத்துவிட்டார். பெரியார் இந்தியப் பார்ப்பனக் கட்டமைப்பை உடைக்க தனிநாடு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார். அதனை ஓசையில்லாமல் மருதையன் மூடிமறைத்துவிட்டார். பார்ப்பானுக்கு இரட்டை நாக்கு தானே!

ஆளையே மயக்கும் ஆனந்த விகடனில் மருதையன் மேலும் சொல்கிறார், இந்திய ஜனநாயகத்தை சீரமைக்க மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக்கொள்ளும் அதிகாரம் வேண்டுமென்று. அதை ரொம்ப நாளைக்கு முன்னாடியே சோரம்போன பூணூலிஸ்டு சோமநாத் சட்டர்ஜீ சொல்லிவிட்டார். சரி, திரும்ப அழைத்துக்கொள்வது என்பது மீண்டும் ஒரு ‘தேர்தல்’ வடிவில் தானே இருக்க முடியும்! அடப் பாவிகளா, எத்தனைத் தேர்தல்களையப்பா நீங்கள் மக்கள் மீது சுமத்துவீர்கள். அந்தத் தேர்தல் மட்டுமென்ன ஒழுங்காகவா நடக்கும். தேர்தலை புறக்கணிக்கச் சொல்கிறார்கள் இவர்கள்! இவர்கள் பேசும் ஒவ்வொன்றையும் சோதனைக் குழாயிலிட்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும் தோழர்களே. தயவு செய்து அப்படியே நம்பி விடாதீர்கள்.
தொடரும்

1 comment:

? said...

ஏன் பெரியாரிஸ்டுகளிடம் மாத்திரம் கருத்தை தர்க்கரீதியாக எதிர்வாதிக்கு கிடுக்குப்பிடி போட்டு பேச முடியவில்லை... அப்படி பேசினாலும் ஒட்டைகளை வைத்துக் கொண்டே பேசுகின்றீர்கள்... இல்லை என் நீங்கள் மறுத்தால் இந்த கட்டுரையை நான் இதனுடைய 20 சதவீத்த்திற்கும் குறைவான வார்த்தைகளில் ஷார்ப்பாக விளக்கி, விவாத்த்தை வளர்ப்பதற்கு உதவுகிறேன்... கொஞ்சம் பாயிண்ட் பாயிண்டாக எழுதினால் எனக்கும் பதில் சொல்ல உதவியாக இருக்கும். கண்ணோட்டமும் ஒருங்கிணைந்த்தாக இருக்க வேண்டும்... பெரியார் போல இருக்க கூடாது...

Post a Comment